×

உசிலம்பட்டி அருகே குடிநீர் கேட்டு குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

உசிலம்பட்டி, அக். 15: உசிலம்பட்டி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகேயுள்ளது தொட்டப்பநாயக்கனூர். இந்த கிராமத்திலுள்ள ஆதிதிராவிடர் காலனிக்கு கடந்த 15 தினங்களாக வைகை அணை ஆண்டிபட்டி-சேடபட்டி கூட்டு குடிநீர் வரவில்லை. இந்த குடிநீர் அருகிலுள்ள ஒருபகுதியினருக்கு பிரிக்கப்பட்டு வழங்கப்படுவதால், ஆதிதிராவிடர் காலனி பொதுமக்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் தண்ணீர் பிடிப்பதற்காக இடையபட்டி அருகே மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையை தாண்டி வந்துதான் குடிநீர் பிடிக்கமுடியும். அதிகமான போக்குவரத்து மிகுந்த சாலையை கடப்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதனால் குடிநீர் பிடிக்க முடியாமல் உயிர்பயத்தில் வாழ்வதாக கூறுகின்றனர். ஊருக்குள் வழங்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் அனைவரும் பிடிக்க முடியாது. எனவே தங்களது ஆதிதிராவிடர் காலனிக்கு ஏற்கனவே போடப்பட்டுள்ள குழாயில் புதிய இணைப்பு கொடுத்து தண்ணீர் பிரச்சனையை தீர்க்க கூறியுள்ளனர். இது சம்மந்தமாக ஊராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் அளித்துள்ளனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நேற்று மதுரை-தேனி சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இத்தகவலறிந்து உசிலம்பட்டி தாசில்தார் செந்தாமரை மற்றும் போலீசார் கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்படி குடிநீர் கிடைக்க யூனியன் நிர்வாகத்திடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்க உறுதியளித்தனர். அதனையடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : road ,Usilampatti ,
× RELATED 10 ஆண்டுகளாக அவதி சாலை பணி துவங்கா...