×

நத்தம்- மதுரை இடையே அரசு பஸ்கள் இயக்கம் சரியில்லாததால் அவதி

நத்தம், அக். 15: ஆட்கள் பற்றாக்குறையால் நத்தம்- மதுரை இடைய அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படுவதில்லை. இதனால் அனைத்து தரப்பினரும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.நத்தத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளது. இங்கிருந்து சேலம், திருச்செந்தூர் உள்ளிட்ட தொலைதூர பஸ்கள் 20ம், செந்துறை, துவரங்குறிச்சி, கோட்டையூர், அழகர்கோவில் போன்ற சுற்றுவட்டார பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் 20ம் என மொத்தம் 40 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 105 டிரைவர்கள், 105 கண்டக்டர்கள் என 210 பேர் பணிபுரிந்து வருகின்றனர். தவிர அதிகாலை 3.30 மணிக்கு நத்தத்திலிருந்து மதுரைக்கும், நள்ளிரவு 12.30 மணி வரை மதுரையிலிருந்து நத்தத்திற்கும் தொலைதூர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் மதுரை நகர், பொன்மேனி பணிமனைகள், மதுரை பெரியார் நிலையத்திலிருந்தும் நத்தம், சேர்வீடு, செங்குளம் போன்ற ஊர்களுக்கு 4 நகர பஸ்கள் பல்வேறு நகரங்களிலிருந்து வந்து செல்கின்றன.

நத்தம் பகுதி மக்களுக்கு பெரும்பாலும் வர்த்தக தொடர்புள்ள நகரங்களாக மதுரை, திண்டுக்கல் உள்ளது. திண்டுக்கல்லுக்கு காரைக்குடி, தேவகோட்டை, பழநி போன்ற நகரங்களிலிருந்து அதிகம் பஸ்கள் இயக்கப்படுவதால் திண்டுக்கல்லுக்கு பயணிகள் சிரமமின்றி சென்று வருகின்றனர். ஆனால் மதுரை எம்ஜிஆர் மாட்டுத்தாவணி பஸ்நிலையத்திற்கு பெரும்பாலான அரசு பஸ்கள் நத்தத்திலிருந்துதான் இயக்கப்படுகிறது. இரவு 9.50 மணிக்கு மதுரையிலிருந்து நத்தம் செல்லும் தனியார் பஸ்சுக்கு பின்னால் நள்ளிவு 12.30 மணி வரை 6 டிரிப் அரசு பஸ்கள் செல்ல வேண்டும். ஆனால் கடந்த சில வாரங்களாக அவைகள் இயக்கப்படுவது தடைபட்டு நள்ளிரவு 12.30 மணிக்குதான் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால் குழந்தைகளுடன் வரும் பெண்கள் மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தில் வெகுநேரம் காத்திருந்து பஸ் ஏறுவதுடன், கூட்டமும் அதிகமாக இருப்பதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாக நேரிடுகிறது. மேலும் நத்தத்திலிருந்து மதுரைக்கு புறப்படும் நேரங்களிலும் அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி- கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் சரியான நேரத்திற்கு சென்று வர முடியாமல் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்து துறை வட்டாரத்தில் விசாரித்த போது, ‘நத்தம் பணிமனையில் வேலை செய்து பணி நிறைவு செய்தவர்களுக்கு பதிலாக புதிய ஆட்கள் நியமிக்கவில்லை. தொழிலாளர்கள் பற்றாக்குறையால் சில வண்டிகள் நிற்கின்றன. மேலும் சில பேருந்துகள் சிறப்பு பேருந்துகளாக சென்னைக்கு அனுப்பப்படுகின்றன. நத்தம்- மதுரை நான்கு வழிச்சாலை பணிகளுக்காக 37 கிமீ சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
அவைகள் முழுவதும் குண்டும், குழியுமாக இருப்பதாலும், தூசிகள் பறப்பதாலும் பஸ்களை குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்க சிரமமாக உள்ளது. மதுரையிலிருந்து நத்தம் பகுதிக்கு சரியான நேரத்திற்கு பஸ்களை இயக்குவது என்றால் தொழிலாளர் பற்றாக்குறையை போக்குவதுடன், நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையடைந்தால்தான் முடியும்’ என்றனர்.

இதுகுறித்து சமூகஆர்வலர்கள் கூறுகையில், ‘பண்டிகை காலங்களில் வர்த்தகம், தொழில் சம்பந்தமான பொருட்கள் வாங்குவதற்கு நத்தம் பகுதியினர் அதிகம் மதுரைக்கு சென்று வரும் சூழ்நிலை உள்ளது. மேலும் நத்தத்தில் இருந்து மதுரை பகுதிகளில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு தினசரி செல்லும் மாணவ, மாணவிகள் அதிகம் உள்ளனர். இவர்களும் போதிய பஸ் வசதியின்றி மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர். எனவே தொழிலாளர்கள் பற்றாக்குறையை சரிசெய்து நேரத்துக்கு பஸ்களை இயக்க அரசு முன்வர வேண்டும். மேலும் நத்தம்- மதுரை நான்கு வழிச்சாலை பணியை முனைப்பு காட்டி பணிகள் பூர்த்தியாக முழுமை பெறும் வரை இடது, வலது மாற்றுசாலை முறையில் பகுதி சாலைகளை விரைவில் அமைத்து வாகனங்களில் பொதுமக்கள் சிரமமின்றி சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Nattam ,Madurai ,
× RELATED நத்தம் அருகே ஆண்கள் ஸ்பெஷல் திருவிழா 50...