×

ஓமலூர் அரசு மருத்துவமனையில் பாம்பு கடிக்கு சிகிச்சை தாமதத்தால் இளம்பெண் அலறல்

ஓமலூர், அக்.15:  ஓமலூர் அரசு மருத்துவமனையில் பாம்பு கடித்த இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்காமல் காக்க வைத்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேச்சேரி ஒன்றியத்தின் அருகில், தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தில் கம்மம்பட்டி கிராமம் உள்ளது. இங்குள்ள மூலக்காடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மனைவி மலர். நேற்று மதியம் விவசாய தோட்டத்தில் வேலைசெய்து கொண்டிருந்தபோது மலரை பாம்பு கடித்துள்ளது. இதில், வலியால் துடித்த அவரை கோவிந்தராஜ் மீட்டு உறவினர்கள் உதவியுடன் அருகிலுள்ள மேச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு, முதலுதவி சிகிச்சைக்கு பின்பு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அங்கு ஒரு மருத்துவர்கள் கூட இல்லாததால் சிகிச்சையளிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், அதிர்ச்சிக்குள்ளான கோவிந்தராஜ் தனது மனைவியை பாம்பு கடித்தது குறித்து அங்குள்ள செவிலியரிடம் கூறியுள்ளார். அவர்கள் பார்த்துவிட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு மாலை 6 மணியளவில் கூறியுள்ளனர். அதுவரை மலர் கதறி துடித்தவாறு இருந்தது பார்க்க பரிதாபமாக இருந்தது. இதையடுத்து, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பாம்பு கடித்த பெண்ணுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காதது வேதனை அளிக்கிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு செவிலியர்கள் மட்டும் ஊசி போட்டு மாத்திரை கொடுத்து அனுப்புகின்றனர். இதனால், ஏழை -எளிய நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஓமலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் தங்கி சிகிச்சை அளிக்கவும், நாய் கடி, பாம்பு கடிக்கு சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : Omalur Government Hospital ,
× RELATED ஓமலூர் அரசு மருத்துவமனையில் காயமடைந்தவரை அனுமதிக்காமல்