×

மாவட்டம் முழுவதும் 3.53 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

நாமக்கல், அக். 15: நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நேற்று துவங்கியது. கலெக்டர் மெகராஜ், நாமக்கல்லை அடுத்த ஆவல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற முகாமில் கலந்து கொண்டு, கோமாரி நோய்தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்தார்.  பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 3.53 லட்சம் கால்நடைகளுக்கு, முழுமையாக தடுப்பூசி போடப்பட உள்ளது. 21 நாட்கள் முகாம் தொடர்ந்து நடைபெறும். கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கொண்ட 105 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் முகாம் நடத்தப்படுகிறது. விவசாயிகள் 3 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடைகளை முகாமிற்கு  அழைத்து சென்று தடுப்பு ஊசிகளை தவறாமல் போட்டு கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் பொண்ணுவேல், துணை இயக்குநர் பழனிவேல், முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் கவிதாசந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து கலெக்டர் மெகராஜ் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு சென்றார். அங்கு 28 குழந்தைகள் படிப்பதாக கலெக்டரிடம் பள்ளி தலைமை ஆசிரியர் கூறினார். கிராமத்தில்  உள்ள அனைத்து குழந்தைகளையும் அரசு பள்ளியில் சேர்க்கும்படி, பள்ளிக்கு வந்திருந்த ஊர் மக்களை கலெக்டர் கேட்டுகொண்டார். பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு நல்லமுறையில் கவனித்தால், அனைத்து மாணவர்களும் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு வருவார்கள் என கலெக்டர் அப்போது தெரிவித்தார்.

பால் கறக்க முடியாமல் உரிமையாளர்கள் தவிப்பு
கோமாரி நோய் தடுப்பூசி போட, பசு மற்றும் எருமை மாடுகளை, காலை 7 மணிக்கே முகாம் நடைபெறும் அரசு பள்ளி கூடத்தின் அருகே மாட்டின் உரிமையாளர்கள் கொண்டுவந்து கட்டி வைத்திருந்தனர். காலை 8 மணிக்கு கலெக்டர் முகாமை தொடங்கி வைக்க வருகிறார் என அழைத்து வந்திருந்தனர். இதனால் காலையில் மாடுகளில் இருந்து பால் கறக்கப்படவில்லை. கலெக்டர் மெகராஜ், காலை 9 மணிக்கு பிறகே முகாம் நடைபெறும் இடத்துக்கு வந்தார். இதனால் நீண்டநேரம் ஒரே  இடத்தில் மாடுகள் கட்டி வைக்கப்பட்டி இருந்தால் மாடுகள் தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தது. பால் காரர்களும் முகாம் நடைபெறும் இடத்துக்கே வந்து விட்டனர். இதனால் மாட்டின் உரிமையாளர்கள், முகாம் நடைபெற்ற இடத்திலேயே பாலை கறந்து பால்காரர்களிடம் கொடுத்தனர்.


Tags : district ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...