×

தர்மபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தர்மபுரி, அக்.15:தர்மபுரி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. இது குறித்து கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு, படித்த வேலைவாய்ப்பற்றவர்களுக்கு, உதவித்தொகை வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் 2019 கடந்த செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடையும் காலாண்டிற்கு, தகுதியுடைய படித்த வேலைவாய்ப்பற்றோர், உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படவுள்ளது. உதவித்தொகை பெற, கல்வித் தகுதியை வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவை தொடர்ந்து புதுப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பதிவுசெய்து ஓராண்டு நிறைவு செய்திருத்தல் வேண்டும். தலித், பழங்குடியின பிரிவினருக்கு, கடந்த மாதம் 30ம் தேதி அன்று 45 வயதும், மற்றவர்களுக்கு 40 வயதும் கடந்திருக்கக் கூடாது. விண்ணப்பதாரரின் குடும்ப வருமானம் ஆண்டிற்கு ₹72 ஆயிரம் மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான உச்சவரம்பு இல்லை.

 விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரியில் நேரிடையாக படித்துக் கொண்டிருக்க கூடாது. (அஞ்சல் வழியில் படிக்கலாம்). உதவித்தொகை பெற முதல்முறையாக விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுடையவர்கள், விண்ணப்பங்களை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்து, வங்கியில் துவக்கப்பட்ட கணக்குப் புத்தகம் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட பிற சான்றுகளுடன் வரும் நவம்பர் 30ம் தேதி வரை, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்கலாம். மேலும், ஏற்கனவே உதவித்தொகை பெற்று மூன்றாண்டு காலம் நிறைவு பெறாமல், 2019-2020ம் நிதியாண்டிற்கு சுயஉறுதி ஆவணம் அளிக்காதவர்கள், அடுத்தமாதம் 30ம் தேதிக்குள் சுய உறுதிமொழி ஆவணம் அளித்து தொடர்ந்து, உதவித்தொகை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : district ,Dharmapuri ,
× RELATED கள்ளத்துப்பாக்கியை ஒப்படைக்காவிட்டால் குண்டாஸ்