×

உரிய நீச்சல் பயிற்சி பெறாமல் ஏரி, குளங்களில் குழந்தைகள் குளிக்க அனுமதிக்கக் கூடாது

தர்மபுரி, அக்.15: ஆறுகள், ஏரிகள், குளங்களில் உரிய நீச்சல் பயிற்சி பெறாமல் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிகள் குளிக்க பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது என தர்மபுரி கலெக்டர் பேசினார்.சர்வதேச பேரிடர் துயர் துடைப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி, தீயணைப்பு துறையினரின் பேரிடர் தடுப்பு செயல்முறை விளக்கம், கலெக்டர் மலர்விழி முன்னிலையில் நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது: வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் வரை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த காலங்களில் ஆறுகள், ஏரிகள், குளங்களில் உரிய நீச்சல் பயிற்சி பெறாமல் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவிரகள் குளிக்க, அவர்களது பெற்றோர்கள் அனுமதிக்கக்கூடாது. இதனால் உயிரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். பெற்றோர்கள் குழந்தைகளை மிகுந்த கவனமுடன் பராமரிக்க வேண்டும். மேலும் பேரிடர் ஏற்பட்டால் 1077, 101 ஆகிய கட்டணமில்லா தொலைபேசியை தொடர்புகொண்டு, ஆங்காங்கே உள்ள நீச்சல் பயிற்சி பெற்ற முதல்நிலை உதவியாளர்களை அணுகி பயன்பெறலாம்.மழை காலங்களில் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும். குளோரின் கலந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டும். தண்ணீரை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.

இதனால் டெங்கு கொசு புழு உருவாவதை முற்றிலும் தவிர்த்து டெங்கு காய்ச்சல் நோய் ஏற்படாமல் தவிர்க்கலாம். பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்துகளை, தீயணைப்புத்துறையினர் தெரிவித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி விபத்துகளிலிருந்து தவிர்க்க முடியும். பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு பேசினார். தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில், தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேரிடர் காலங்களில் வீடுகளில் காஸ் சிலிண்டர் பயன்பாடு முதலுதவி குறித்தும், தீ தடுப்பு ஆலோசனைகள், விபத்து ஏற்படும் போது மீட்பு நடவடிக்கையை எவ்வாறு மேற்கொள்வது,  வெள்ள காலங்களில் ஏரி, குளங்கள், ஆறுகளில் ஆழமும், நீரோட்டமும் உள்ள தண்ணீருக்குள் செல்ல வேண்டாம் என்பது குறித்தும், மழை அதிகமாக இருக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும், பாம்பு பிடித்தல் போன்ற பல்வேறு பேரிடர்கள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரஹமத்துல்லா கான், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) கீதாராணி, மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆனந்த், தாசில்தார் சுகுமார், தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் ராஜா, முன்னணி தீயணைப்போர் கன்னியப்பன், தீயணைப்புத்துறை பணியாளர்கள் தேவராஜன், சந்தோஷ், வினோத், விமலானந்தன், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Tags : Children ,lakes ,
× RELATED ஹரியாணாவில் தனியார் பள்ளிப் பேருந்து...