×

வீட்டுமனை வழங்கக்கோரி கலெக்டரிடம் மக்கள் மனு

தர்மபுரி, அக்.15: பென்னாகரம் அருகே வீட்டுமனை வழங்கக் கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.  பென்னாகரம் அருகே சிகரலஅள்ளியை சேர்ந்த பொதுமக்கள், நேற்று கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: பென்னாகரம் தாலுகா, சிகரலஅள்ளியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ஓடை அருகே புறம்போக்கில் குடிசை வீடுகளில் வசித்து வருகிறோம். மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகமானால் வீடுகள் சேதமடைகின்றன. மேலும், ஓடையில் பெரும்பாலும் சாக்கடை ஓடுவதால் பெரியவர்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி தொற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, எங்களுக்கு வீட்டு மனையும், வீடும் கட்டி தரவேண்டும் என மனுவில் கூறியுள்ளனர்.
தர்மபுரி பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராஜவீரப்பன் நேற்று கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில், நல்லம்பள்ளியில் பஸ்நிலையம் கட்டி ஒரு ஆண்டுக்கு மேலாகியும், இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. எனவே, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, அனைத்து பஸ்களும் சென்று வர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், நல்லம்பள்ளி ஏரியை பருவமழைக்கு முன்பு, தூர்வார வேண்டும் என கூறப்பட்டுள்ளது.பென்னாகரம் அருகே எர்ரகொல்லனூர் ஊர் பொதுமக்கள் கலெக்டர் மலர்விழியிடம் கொடுத்த மனுவில், பென்னாகரம் முதுகம்பட்டி அருகே அனுமந்தராயன் ஏரி 30 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதன் மூலம் 1500 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த ஏரி 90 சதவீதம் பகுதி ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை தூர்வார வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Tags : collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...