வெண்டிபாளையம் ரயில்வே கேட்டில் சப்-வே கட்டுமான பணிகள் தீவிரம்

ஈரோடு, அக். 15:  ஈரோடு வெண்டிபாளையம் ரயில்வே கேட்டில் சப்-வே கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் அப் பகுதியில் சாலை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு பழைய கரூர் ரோட்டில் வெண்டிபாளையம் செல்லும் வழியில் இரண்டு ரயில்வே கிராசிங் உள்ளன. இதன் வழியாக, ஈரோட்டில் இருந்து சேலம், சென்னை உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து ஈரோடு ரயில் நிலையம் வழியாக கோவை மற்றும் கேரளாவுக்கு தினமும் 50க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கிறது.இந்த ரயில்வே கேட்டுகளின் இடைபட்ட பகுதியில்தான் வெண்டிபாளையம், மோளகவுண்டன்பாளையம், லோகநாதபுரம் உள்ளிட்ட ஊர்கள் உள்ளன. இந்த ரயில்வே கிராசிங் வழியாக ரயில்கள் செல்லும்போது கேட் பூட்டப்படும். ஒவ்வொரு ரயிலும், கேட்டை கடக்கும் வரை சுமார் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இதனால், இப்பகுதி மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிக்கு செல்வதில் கால தாமதமாகிறது. இதுதவிர, இப்பகுதி மக்களுக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டால் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் அழைத்தால்கூட ரயில்வே கேட்டுகள் இருப்பதால் குறித்த நேரத்திற்குள் ஊருக்குள் வர முடிவதில்லை. இதற்கு ஒரே தீர்வு இந்த 2 ரயில்வே கேட்டுகளையும் கடந்து செல்லும் வகையில் மேம்பாலம் அல்லது சப்-வே அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும், ரயில்வே நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கோரிக்கையை ஏற்ற சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம், வெண்டிபாளையம் 2வது ரயில்வே கேட்டில் வாகன ஓட்டிகள் கடந்து செல்லும் வகையில் சப்-வே அமைக்க முடிவு செய்யப்பட்டு கடந்த ஒரு வாரமாக வெண்டிபாளையம் ரயில்வே கேட்டில் சப்வே அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. இதனால், அப்பகுதியில் சாலை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:ஈரோடு வெண்டிபாளையம் 2வது ரயில்வே கேட்டில் சப்-வே அமைக்கும் பணி கடந்த வாரம் துவங்கப்பட்டது.  சப்-வேயின் இருபுறமும் வாகனங்கள் சென்று வர ஏதுவாக வழி ஏற்படுத்த பொக்லைன், ஜேசிபி வாகனங்கள் உதவியுடன் பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 3 மாதத்திற்குள் பணி முடிக்கப்படும். வெண்டிபாளையம் முதலாவது ரயில்வே கேட்டில் சப்-வே அமைக்கும் திட்டம் இன்னும் கொண்டு வரவில்லை. அடுத்த கட்டமாக அங்கு சப்-வே அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: