×

ஈரோடு மாவட்டத்தில் 2வது நாளாக மழை பவானி ஆற்றில் திறக்கப்பட்ட 5,000 கன அடி உபரிநீர் காவிரியில் கலப்பு

ஈரோடு, அக். 15:  ஈரோடு மாவட்டத்தில் 2வது நாளாக கனமழை பெய்தது. பவானி ஆற்றில் திறக்கப்பட்ட 5 ஆயிரம் கனஅடி உபரிநீர் காவிரியில் கலக்கிறது.ஈரோடு மாவட்டத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை, 252.79 மில்லி மீட்டர் பதிவாகி உள்ளது. இயல்பு நிலையை விட கூடுதலாக பெய்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வரும் 17ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் வெப்பசலனம் காரணமாக கடந்த 2 நாட்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது.மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வரும் மழையால் பவானி ஆற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. குறிப்பாக, குண்டேரிப்பள்ளம் அணைக்கட்டு நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணை முழு கொள்ளளவை எட்டியதையடுத்து, கடந்த 2 நாட்களாக உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

பவானி ஆற்றில் வரும் மழைநீரால் காலிங்கராயன் அணைக்கட்டு நிரம்பி 5,092 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் கலந்து வருகிறது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்): ஈரோடு 36, பெருந்துறை 7, கோபி, தாளவாடி தலா 4, சத்தி 17, பவானிசாகர் 7.8, பவானி 7.4, நம்பியூர் 9, சென்னிமலை 11, மொடக்குறிச்சி 30, அம்மாபேட்டை 21.4, குண்டேரிப்பள்ளம் 50, வரட்டுப்பள்ளம் 75.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தில் சராசரி மழையளவு 16.9 மில்லிமீட்டர் ஆகும். தொடர்மழை காரணமாக, பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்திற்கு 2100 கனஅடி திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.87 அடியாகவும், வரத்து 3578 கனஅடியாகவும் உள்ளது.




Tags : river ,Bhavani ,district ,Erode ,
× RELATED பாவங்களைப் போக்கும் பவானி அம்மன்