பிரேக் பழுதாகி தறிகெட்டு ஓடிய லாரியை நிறுத்த முயன்ற டிரைவர் உடல் நசுங்கி பலி

பல்லாவரம்: பம்மல் நாகல்கேணி பகுதியில் தறிகெட்டு ஓடிய லாரி மோதியதில் டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம், வெண்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (43), லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு, வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் இருந்து பதப்படுத்தப்பட்ட தோல்களை  லாரியில் ஏற்றிக்கொண்டு பம்மல்  நாகல்கேணியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலைக்கு புறப்பட்டார். நேற்று அதிகாலை நாகல்கேணி பிள்ளையார் கோயில் தெருவில் லாரி சென்றபோது, திடீரென பிரேக் பழுதானது. இதனால், அதிர்ச்சியடைந்த டிரைவர் முருகன், லாரியை மெதுவாக இயக்கி, நிறுத்த முயன்றார். அதன்படி, லாரி வேகம் குறைந்து மெதுவாக சென்றது. அப்போது, முருகன் லாரியில் இருந்து கீழே குதித்து, அருகில் கிடந்த, கல்லை கொண்டு லாரியின் முன் சக்கரம் முன்பு வைத்து நிறுத்த முயன்றுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக லாரி முருகனின் மீது ஏறி இறங்கியது. இதில் முருகன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், டிரைவர் இல்லாமல் சென்ற லாரி அதிர்ஷ்டவசமாக எவர் மீதும் மோதாமல், அருகிலிருந்த தனியார் தொழிற்சாலை மதில் சுவர் மீது மோதி நின்றதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், டிரைவர் முருகன் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: