பிரேக்கிங் சிஸ்டம் நடைமுறையை கண்டித்து சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: சட்டக் கல்லூரியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘பிரேக்கிங் சிஸ்டம்’ என்ற நடைமுறையை ரத்து செய்ய கோரி, தரமணியில் சட்ட கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ்  13 சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் சென்னையில் 2 கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் சட்ட கல்லூரியில் பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், பி.பி.ஏ பட்டத்துடன் கூடிய எல்எல்பி என்னும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு நடத்தப்படுகிறது.

இந்த படிப்புகளில் தலா 180 பேர் வீதம், 720 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இந்நிலையில், 2019-20  கல்வி ஆண்டு முதல் பிரேக்கிங் சிஸ்டம் என்ற புதிய முறையை சட்ட பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, தேர்வில் நிலுவை வைக்கும் பாடங்களை அடுத்தடுத்த ஆண்டில் எழுதி தேர்ச்சி பெற்றால் தான், அதற்கு அடுத்த ஆண்டு படிப்பை தொடர முடியும். குறிப்பாக முதலாம் ஆண்டில் படித்து வரும் மாணவர்கள்  முதலாண்டுத் தேர்வில் அரியர் வைத்தால், இரண்டாம் ஆண்டுக்குள் அதை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் இல்லை என்றால், அந்த மாணவர் 3 ஆண்டுக்கு செல்ல முடியாது. அதேபோல 3ம் ஆண்டில் அரியர் வைத்தால் 4ம் ஆண்டில் அந்த பாடங்களை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். இல்லை என்றால் அந்த மாணவர் 5ம் ஆண்டுக்கு செல்ல முடியாது.

இந்த புதிய முறை அறிமுகம் செய்ததற்கு பிறகு நடப்பு கல்வி ஆண்டில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. எனவே, இந்த நடைமுறையை ரத்து செய்ய கோரி, தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று காலை 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் குறித்து சட்ட மாணவர்கள் கூறியதாவது: சட்ட பல்கலைக்கழகத்தில் இதுவரை இல்லாத வகையில் பிரேக்கிங் சிஸ்டம் என்ற புதிய முறையை பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. அரியரை  பொறுத்தவரையில் கடந்த ஆண்டு வரை மிக சிலர்தான் வைத்துள்னர். ஆனால் இந்த ஆண்டு திடீரென 156 பேர் அரியர்ஸ் வைத்துள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது நாங்கள் எதிர்பார்க்காதது. அதேநேரத்தில் ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்ட படிப்புக்கு மட்டும் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டு வந்துள்ளனர். 3 ஆண்டு படிப்புக்கு இந்த முறை இல்லை. தனியார் கல்லூரி மாணவர்கள் இது தொடர்பாக, போராட்டம் நடத்தியதை அடுத்து பிரேக்கிங் சிஸ்டம் நீக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு நடக்கும் போது, தேர்வில் தோல்வி அடைந்தால் மறுமதிப்பீடு செய்ய வாய்ப்பு அளிக்கப்படும். அதற்கு பிறகு விடைத்தாள் நகல் கொடுத்து வெளியில் மதிப்பீடு செய்து பார்க்க வாய்ப்பு அளிக்கப்படும். அதற்கு பிறகுதான் கடைசி வாய்ப்பாக கட்டாயமாக அரியர் தேர்வு எழுத வேண்டிய நிலை ஏற்படும். அதற்கான கட்டணம் ரூ.10 ஆயிரம் என இருந்தது. அதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கட்டணத்தை ரூ.200 என குறைத்தனர். ஆனால், இந்த பிரேக்கிங் சிஸ்டம் மாணவர்களை தடை செய்யத்தான் பயன்படும். இதன் மூலம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். அதனால் இந்த புதிய முறையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.  மாணவர்களின் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக பதிவாளர் கூறுகையில், மாணவ மாணவியரின் போராட்டம் மற்றும் கோரிக்கை  குறித்து பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும், என்றார்.

Related Stories: