சுகாதார சீர்கேட்டை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன் பொதுமக்கள் சாலை மறியல் : போக்குவரத்து பாதிப்பு

திருவொற்றியூர்: எண்ணூரில் சுகாதார சீர்கேட்டை கண்டித்து சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்திற்கு உட்பட்ட எண்ணூர் சத்தியவாணி முத்து நகர், உலகநாதபுரம், திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள கழிவுநீர் கால்வாய்களை அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், தூர்ந்து நீரோட்டம் தடைபட்டுள்ளது. இதனால், பல மாதங்களாக ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி வருகிறது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன்,  கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் உள்ள மக்களுக்கு  மலேரியா, டைபாய்டு, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.

இந்நிலையில், கால்வாயில் உள்ள கழிவுகளை அகற்ற கோரி எண்ணூர் கத்திவாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி உதவி  செயற்பொறியாளர் அலுவலகத்தில் இப்பகுதி மக்கள் நேற்று மனு கொடுக்க வந்தனர். ஆனால் அங்கு அதிகாரிகள் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், உதவி பொறியாளர் அலுவலகம் முன், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனால், மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து, கால்வாய்களில் உள்ள கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தால் தான் கலைந்து செல்வோம், என்றனர். இதை ஏற்காத போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றி,  எண்ணூர் சுனாமி குடியிருப்பில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து, மாலையில் விடுவித்தனர். பொதுமக்கள் மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: