×

திருத்தணி, திருவள்ளூரில் மர்ம காய்ச்சலுக்கு இளம்பெண், சிறுமி பரிதாப பலி

திருத்தணி, அக். 15:  திருவள்ளூர், திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, பொன்னேரி உள்பட பல்வேறு பகுதிகளில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மர்ம காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம், தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். அப்போது நடக்கும் மருத்துவ பரிசோதனையில் சிலருக்கு டெங்கு அறிகுறி காணப்படுகிறது.
திருத்தணி அடுத்த அருங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. விவசாயி. இவரது மனைவி சங்கீதா (21). இவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 6 மாத கைக்குழந்தை உள்ளது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக சங்கீதாவுக்கு கடுமையாக காய்ச்சல் இருந்தது. அவரை திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு உறவினர்கள் சேர்த்தனர். ஆனால் அவருக்கு காய்ச்சல் குணமாகாததால் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் சங்கீதா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், கடந்த ஒரு வாரத்தில் திருவாலங்காடு, மணவூர் அடுத்த மருதவல்லிவுரம் ெபருமாள் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் நிஷாந்த் (11 மாத குழந்தை), திருத்தணி அடுத்த தெக்கலூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் மகள் யோகேஸ்வரி (12) ஆகியோர் மர்மகாய்ச்சலால் இறந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சங்கீதா மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தார். பருவநிலை மாற்றத்தால் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலை தடுக்க மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறையும் இணைந்து கிராமப்புறத்தில் ஆங்காங்கு இலவச மருத்துவமுகாம்கள் நடத்தி மக்களுக்கு மருந்து மாத்திரை வழங்க வேண்டும் என்றனர்.

திருவள்ளூர்:  திருவள்ளூர் அடுத்த தண்டலம் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி புனிதா. இவர்களது மகள் மோனிஷா(9). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அவரது பெற்றோர் திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு மாத்திரை மருந்து மட்டும் கொடுத்துவிட்டு இரத்தப் பரிசோதனை எதையும் செய்யாமல் நேற்று காலை சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு  சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.  அங்கு இரத்தப் பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மாலை 6 மணி அளவில் சிறுமி மோனிஷா இறந்தாள்.

Tags : Tiruvallur ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் கலெக்டர் ஆய்வு