இருசக்கர வாகனத்தில் 2 பேர் மட்டுமே வரவேண்டும் மனைவி, குழந்தைகளை அழைத்து வந்த கணவருக்கு அபராதம் விதிப்பு

சிதம்பரம், அக். 15: சிதம்பரம் நகரில் பைக்கில் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வந்த கணவரை நகர போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் இச்செயலை வாட்ஸ்அப், முகநூலில் பார்த்த பொதுமக்கள் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சிதம்பரம் கஞ்சிதொட்டி அருகாமையில் நேற்று முன்தினம் மாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புவனகிரி பகுதியில் இருந்து மனைவி, குழந்தைகளுடன் பைக்கில் வந்த நபரை போலீசார் நிறுத்தி விசாரித்துள்ளனர். அதற்கு பைக்கில் வந்தவர் நான் தான், ஹெல்மெட் அணிந்துள்ளேனே, எதற்கு என்னை பிடித்து விசாரிக்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு பைக்கில் 2 பேர் மட்டும் தான் வரவேண்டும், எதற்கு குழந்தைகளை அழைத்து வந்தீர்கள் எனக் கேட்டு போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பைக்கில் வந்த பெண்மணியும், பலமுறை சாரி, சாரி (மன்னிப்பு) என கேட்டும் போலீசார் அபராதம் விதித்த சம்பவம் சிதம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கட்செவி (வாட்ஸ்அப்), முகநூலில் (பேஸ்புக்) வைரலாகி வருகிறது. போலீசாரின் இச்செயலுக்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே ஸ்வைப் மெஷினை பயன்படுத்தி அபராதம் விதிக்க வேண்டும் என்ற விதி இருந்தும், அந்த விதியை மீறி சிதம்பரத்தில் போலீசார் நடத்திய இந்த வாக்குவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிதம்பரம் நகரில் பார்க்கிங் வசதி இல்லாமல் பல்வேறு கடைகள், நிறுவனங்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் பெருத்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிதம்பரம் காசுக்கடை தெரு, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஆட்டோக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படுகின்றன. இதையெல்லாம் கண்டுகொள்ளாத போலீசார், இருசக்கர வாகனங்களில் வருபவர்களை மட்டுமே நிறுத்தி, அதுவும் ஆண்கள், பெண்கள் என பாரம் பார்க்காமல் அபராதம் விதிப்பதில் குறியாக உள்ளதாக போலீசார் மீது பொதுமக்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

Related Stories: