×

கால்வாயை சீரமைப்பதில் அலட்சியம் ஆவடி - பூந்தமல்லி சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்

ஆவடி, அக்.15: ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கால்வாயை பராமரிக்காததால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள்  கடும் அவதிப்படுகின்றனர். ஆவடியில் இருந்து ஜெ.பி எஸ்டேட், கோவத்தனகிரி, பருத்திப்பட்டு, வீரராகவபுரம், சென்னீர்குப்பம் வழியாக பூந்தமல்லிக்கு நெடுஞ்சாலை செல்கிறது.  இச்சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் தனியார் பொறியியல், பாலிடெக்னிக், கலைக்கல்லூரிகள், பள்ளிகளும் உள்ளன. இச்சாலையை பயன்படுத்தி பள்ளி, கல்லூரிகளுக்கு ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகளும் சென்று வருகின்றனர். இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலை எப்போதும் பரப்பரப்பாக காணப்படும். இச்சாலை ஓரத்தில் மழைநீர் செல்ல கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மழைநீர் கால்வாய் பராமரிப்பு பணி ஆவடி மாநகராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த சில மாதங்களாக, கால்வாயை மாநகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை. இதனால் மழைக் காலத்தில் தண்ணீர் செல்ல முடியாமல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஆறாக ஓடுகிறது. இதன் காரணமாக, பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கால்வாய் பல மாதங்களாக தூர்வாராமலேயே கிடக்கின்றன. மேலும், கால்வாய் சரிவர பராமரிப்பு இன்றியும் உடைந்து கிடக்கின்றன. இந்த கால்வாயில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விடப்படுவதால் மாசடைந்து வருகிறது. இதோடு மட்டுமல்லாமல், சாலை ஓரத்தில் உள்ள சில குடியிருப்புகள், வணிக நிறுவனங்களில் இருந்தும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளும் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.  சிறு மழை பெய்தால் கூட கழிவு நீருடன் மழைநீரும் கலந்து நெடுஞ்சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால், சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு தோல் நோய் உருவாகி அவதிப்படுகின்றனர்.  இதோடு மட்டுமல்லாமல், இரு சக்கர வாகன ஓட்டிகளும், பள்ளி மாணவர்களும் கழிவுநீரால் சாலையில் அவதிப்பட்டு சென்று வருகின்றனர். சாலையில் ஓடும் கழிவுநீரால் தூர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்களைப் பரப்புகின்றன.

இதுகுறித்து, அப்பகுதி சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் செய்தும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயை சீரமைக்காமல் அலட்சியமாகவே உள்ளனர்.  எனவே,  ஆவடி- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மழைநீர் கால்வாயை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கவும், கழிவுநீர் விடுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : road ,Poonthamalli ,
× RELATED வத்தலக்குண்டு- அழகாபுரி சாலையில் ஆளை...