காரைக்காலில் விஷவாயு தாக்கி மீனவர் பலி

காரைக்கால், அக். 15: காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில், கடந்த 10ம் தேதி படகில் மீன் அள்ளும் போது, மயங்கி விழுந்த 5 பேரில், ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.  காரைக்கால் கிளிஞ்சல்மேட்டில் வசிப்பவர் செல்வகுமார். இவரது விசைப்படகில் கொண்டுவரப்பட்ட மீன் கழிவுகளை கடந்த 10ம் தேதி, படகின் கீழ் உள்ள மீன் சேமிப்பு கிடங்கிலிருந்து,  அள்ள, கிளிஞ்சல் மேட்டைச்சேர்ந்த பாஸ்கரன் மகன் சக்திவேல்(20), அருண்(23), சதிஷ்(22), சஜாயாதர்(23), நாகை ஏனங்குடியைச சேர்ந்த மாதவன்(22) ஆகிய 5 பேர் இறங்கியுள்ளனர். சிறிது நேரத்தில், சேமிப்பு கிடங்கிலிருந்த விஷவாயுவில் சிக்கி 5 பேரும் மயங்கி விழுந்தனர். மீன் கெட்டுப்போகாமல் இருக்க தெளிக்கப்படும் ரசாயன பவுடர்தான் விஷவாயுவாக மாறியதாக கூறப்படுகிறது.

 இதனால், கிடங்கில் இறங்கும் முன் சிறிது நேரம் கிடங்கின் மூடியை திறந்து வைப்பது வழக்கம். ஆனால், இறங்கியவர்கள் சேமிப்பு கிடங்கை சிறிது நேரம் திறந்து வைக்காமல் இறங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, செல்வகுமார் மற்றும் மீனவர்கள், 5 பேரையும் மீட்டு காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர்.இதில், மேல்சிகிச்சைக்காக சக்திவேலை, திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சக்திவேல் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இது குறித்து, நிரவி காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: