×

விளாங்காடு - தண்ணீர் பந்தல் சாலையில் சாய்ந்து விழும் அபாயத்தில் மின்கம்பம்

செய்யூர், அக். 15: விளாங்காட்டில் இருந்து தண்ணீர்பந்தல் வரை செல்லும், நெடுஞ்சாலையோரம் பல வருடங்களுக்கு முன்பு மின் கம்பம் அமைக்கப்பட்டன. அந்த மின் கம்பம் முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுவதால், எப்போது சாய்ந்து விழுமோ என்ற அச்சத்தில் வாகன ஓட்டிகள் அப்பகுதியை கடந்து சென்று வருகின்றனர். சித்தாமூர் அடுத்த போந்தூர், அமைந்தகரணை, விளாங்காடு வழியாக செய்யூர் செல்லும் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இவ்வழியாக தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், ஐநூறுக்கும் மேற்பட்ட இதர வாகனங்களும் சென்று வருகின்றன.

இந்நிலையில், விளாங்காடு பகுதியில் இருந்து தண்ணீர் பந்தல் செல்லும் சாலையோரம் கடந்த 10 வருடங்களுக்கு முன் மின் வாரியம் மூலம் அமைக்கப்பட்ட ஒரு மின்கம்பம் முற்றிலும் சிதிலமடைந்து கம்பத்தில் உள்ள இரும்பு கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு காணப்படுகிறது. தற்போது, எலும்புக்கூடாக காட்சி அளிக்கிறது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அப்பகுதியில் கால்நடைகளை மேய்பவர்களையும் அச்சுறுத்தி வருகிறது. பலத்த காற்று வீசும் நேரங்களில் கம்பம் சாய்ந்து விழுமோ என்ற அச்சத்தால் பொதுமக்கள் அப்பகுதியில் நடமாட தயங்குகின்றனர். எனவே, இக்கம்பம் சாய்ந்து விழுந்து பெரும் விபத்து நேரிடுவதற்கு முன் கம்பத்தை மாற்றியமைக்க மின் வாரிய துறை அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு