×

தண்டலம் ஊராட்சியில் பூட்டிேய கிடக்கும் சமுதாய கூடம்

திருப்போரூர், அக். 15: திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய தண்டலம் ஊராட்சியில் வளர்ச்சி அடைந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தை கணக்கில் கொண்டு சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கடந்த 2014-2015ம் ஆண்டு அப்போதைய ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன்  தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒரு ஆண்டு காலத்தில் கட்டுமான பணிகள் முடிவடைந்து 2015ம் ஆண்டு இறுதியில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் சமுதாயக் கூடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆனால், இதுவரை குடிநீர் வசதி இல்லை, கழிப்பறை வசதி இல்லை, சமையற்கூடம் மற்றும் பாத்திரங்கள் இல்லை என்று கூறி கடந்த 4 ஆண்டுகளாக இந்த சமுதாயக்கூடம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படாததால் தண்டலம் ஊராட்சியில் உள்ள மக்கள் தங்களின் இல்லத்தில் நடைபெறும், திருமண வரவேற்பு, பிறந்த நாள் விழா, திருமண நிச்சயதார்த்தம், பூப்புனித நீராட்டு விழா உள்ளிட்ட சிறு நிகழ்ச்சிகளை குறைந்த செலவில் நடத்த முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக அதிக வாடகை செலுத்தி தனியார் திருமண மண்டபங்களை நாட வேண்டிய நிலை உள்ளதாக தண்டலம் ஊராட்சி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகவே, திருப்போரூர் ஒன்றிய நிர்வாகம் நான்கு ஆண்டுகளாக பூட்டி வைத்திருக்கும் தண்டலம் ஊராட்சி சமுதாயக் கூடத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tandalam ,community hall ,
× RELATED தேர்தல் பணி போலீசார் தபால் ஓட்டு போட்டனர்