×

விருத்தாசலம் நகராட்சியில் குப்பை அரைக்கும் இயந்திரம் துவக்கம்

விருத்தாசலம், அக். 15: விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகண்டியங்குப்பம் நுண்ணுயிர் செயலாக்க மையத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான குப்பை அரைக்கும் இயந்திரத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுகாதார அலுவலர் குமார் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் பாலு தலைமை தாங்கி இயந்திரத்தை துவக்கி வைத்து பேசியதாவது, விருத்தாசலம் நகராட்சியில் உருவாகும் குப்பைகள், காய்கறி கழிவுகள் உள்ளிட்ட மக்கும் கழிவுகளை நுண்ணுயிர் செயலாக்க மையத்திற்கு கொண்டுவந்து குப்பை அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைத்து நுண்ணுயிர் தவிடு கலந்து அங்கு உள்ள தொட்டியில் வைக்கப்பட்டு வருகிறது. பின்பு 21 நாட்களுக்கு பிறகு அவைகள் மக்கி உரமான பிறகு ஒரு டன் ஆயிரம் ரூபாய் விகிதத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் பொது இடங்கள் மற்றும் வீடுகளில் சேகரித்து எடுத்து வரப்பட்டு சிமெண்ட் ஆலைக்கு எரிபொருளாக பயன்படுத்த அனுப்பி வைக்கப்படுகிறது. வருகிற நாட்களில் பொதுமக்கள் கொடுக்கின்ற மக்கும் குப்பைகளை உரமாக உருவாக்கி அவர்களிடமே அந்த உரத்தை தருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்து பொதுமக்கள் வீட்டிலேயே குப்பைகளை தரம் பிரித்து தர வேண்டும். அதுபோல் பொதுஇடங்களில் கொட்டுவதையும் தவிர்க்க வேண்டும் என்றார். அப்போது நகராட்சி மேற்பார்வையாளர்கள் முத்தமிழ்செல்வன், கொளஞ்சி, முத்தமிழன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Garbage Milling Machine Launches ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது