×

கோரிக்கைகளை வலியுறுத்தி திட்டக்குடி பேரூராட்சி அலுவலகம் முன் 23ம் தேதி ஆர்ப்பாட்டம்

திட்டக்குடி, அக். 15:  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கிளை கூட்டம் திட்டக்குடியில் நடந்தது. கூட்டத்துக்கு பழனியாண்டி தலைமை தாங்கினார். மங்களூர் ஒன்றிய செயலாளர் சின்னதுரை, மாவட்ட குழு உறுப்பினர் சொக்கலிங்கம், திட்டக்குடி நகர செயலாளர் சிவஞானம், பழனி உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.கூட்டத்தில், கட்டிடம் கட்டுவோருக்கு கட்டிட பொறியாளர் பரிந்துரை செய்யும் மணல் மதிப்பீட்டு அளவில் மணல் வழங்க வேண்டும். திட்டக்குடி மேல வீதி, தெற்கு வீதி குண்டும் குழியுமாக உள்ளதால், அவற்றை சீர்செய்து தார்சாலை அமைத்து தரவேண்டும். திட்டக்குடி பேருந்து நிலைய நுழைவுவாயிலின் இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்த வேண்டும். பேருந்து நிலையத்துக்குள் தள்ளுவண்டிகளுக்கும் ஆட்டோக்களுக்கும் நிரந்தர இடம் ஒதுக்கி தரவேண்டும். அனைத்து வார்டுகளிலும், வட்டாட்சியர் வளாகத்திலும் கழிப்பிட வசதி செய்து தரவேண்டும்.

பேரூராட்சியில் உள்ள அனைத்து மினிடேங்க் கைப்பம்புகளையும் சீரமைத்து தரவேண்டும். வீமன் ஏரி, கூத்தப்பன்குடிகாடு வாய்க்கால் கரையில் தார்சாலை அமைத்து தர வேண்டும். பேரூராட்சி எல்லைக்குள் அமைந்துள்ள அனைத்து குளம், குட்டை, ஏரிகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றியும் ஆழப்படுத்தியும் வரத்து வாய்க்கால் அமைத்து தரவேண்டும். அண்ணா நகரில் புதியதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வசதி செய்து தரவேண்டும். அனைத்து தெருக்களிலும் சாக்கடை கால்வாய்களை சீரமைத்து கொசு மருந்து அடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 23ம் தேதி திட்டக்குடி பேரூராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Demonstration ,office ,Perakkodi ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...