×

திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கழிவறைகளில் தண்ணீரின்றி நோயாளிகள் கடும் அவதி

திருவாரூர், .அக்15: திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் கழிவறைகளில் தண்ணீர் இல்லாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருவாரூர் கலெக்டர் அலுவலகம் பின்புறத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இதில் தினந்தோறும் சுமார் 1000 பேர் வரை வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி நாகை மாவட்டத்தை சேர்ந்த நோயாளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் குடிநீர், மின்விசிறி ,கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் சரிவர இல்லை என குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த மருத்துவமனையில் இருந்து வரும் எம்.எஸ் வார்டு உட்பட பல்வேறு வார்டுகளில் கழிவறைகளுக்கு உரிய தண்ணீர் இல்லாததன் காரணமாக நோயாளிகள் பலரும் கழிவறைகளை உபயோகிக்க முடியாமல் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதில் நடமாட்டமுள்ள நோயாளிகள் பலரும் மருத்துவமனைக்கு வெளியிலோ அல்லது பிற வார்டுகளுக்கோ சென்று தங்களது காலைக்கடனை தீர்த்துக் கொள்ளும் நிலையில் விபத்து போன்ற பல்வேறு காரணங்களினால் நடக்க முடியாமல் இருந்து வரும் நோயாளிகள் ,வயதான முதியவர்கள் போன்றவர்கள் மிகவும் துன்பப்பட்டு வரும் நிலை இருந்து வருகிறது. கழிவறைகள் சுத்தம் செய்யப்படாமல் அங்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் இருந்து வருகிறது. இது குறித்து மருத்துவமனையின் டீன் விஜயகுமாரிடம் கேட்டபோது. மருத்துவமனைக்கு தண்ணீர் அளிப்பது போன்ற பணிகள் எல்லாம் பொதுப்பணித் துறையை சார்ந்தது. அவர்கள் தான் அதனை சரிசெய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இவ்வாறு மருத்துவ துறையும், பொதுப்பணித் துறையும் தங்களுக்குள் இருந்து வரும் கருத்து வேறுபாடு காரணமாக மருத்துவமனையில் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் கவனம் செலுத்தி மருத்துவமனைக்கு தேவையான நீரினை வழங்குவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் நோயாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvarur Government Medical College Hospital ,
× RELATED திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி...