×

ஆவடி அருகே கொலையான வாலிபர் யார்? அடையாளம் தெரியாமல் போலீசார் திணறல்: புகைப்படத்தை வெளியிட்டு விசாரணை

ஆவடி: ஆவடி அருகே காட்டூர் பகுதியில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வாலிபரை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். ஆவடி அடுத்த காட்டூர், ஆர்ச் அந்தோணி நகரில் நேற்று முன்தினம் மாலை  இரு பைக்குகளில் 4 வாலிபர்கள் வந்து இறங்கியுள்ளனர். பின்னர், அவர்களில் 3 பேர் சேர்ந்து ஒரு வாலிபரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், அவர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து அந்த வாலிபரை சரமாரியாக வெட்டி  உள்ளனர். இதில், அவர் ரத்தவெள்ளத்தில் விழுந்தார். இதனையடுத்து, ஒரு வாலிபர் கீழே உயிருக்கு போராடிய அவரது கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். பின்னர், மூவரும் ஆயுதங்களுடன் இரு பைக்கில் தப்பி சென்றனர்.   தகவலறிந்த ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும்  புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 இதில், இறந்த நபருக்கு சுமார் 25 முதல் 30 வயது இருக்கும். இவரது இடது கையில் ‘’எஸ்.எம்’’ என்ற எழுத்தும் மார்பில் ‘’மீனா ஸ்ரீ’’ என்று ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டு இருந்தது. மேலும் அவர் கை, கால், மார்பு உள்ளிட்ட இடங்களில்  வெட்டு தழும்பு உள்ளது. இவர் லேசாக தாடி வளர்த்து உள்ளார். மேலும், இவர் கருப்பு பேண்டும், வெள்ளை சட்டையும் அணிந்திருந்தார். இவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. இவரை பைக்கில் அழைத்து வந்த மூவரும்  சேர்ந்து வெட்டிக்கொலை செய்து உள்ளனர். இதனால், அவர்களுக்கும், கொலை செய்யப்பட்ட வாலிபருக்கும் இடையே முன் விரோதம் இருந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதனை அடுத்து போலீசார் கண்காணிப்பு கேமரா  உதவியுடன் அப்பகுதியில் பைக்கில் வந்தவர்களின் அடையாளங்களை வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.  

மேலும், போலீசார் சோழவரம் செங்குன்றம், புழல், மாதவரம், நாரவாரிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் காணாமல் போன நபர்களின் விவரங்களையும் சேகரித்து கொலை செய்யப்பட்டவர்  உள்ளாரா எனவும் தேடி வருகின்றனர். கொலை  செய்யப்பட்டவர் யார் என கண்டுபிடித்தால் தான் கொலையாளிகள் குறித்து முழு விவரம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக கொலையாளியின் புகைப்படத்தை வெளியிட்டுஆவடி டேங்க் பேக்டரி காவல்நிலைய  போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : murder victim ,Avadi ,investigation ,
× RELATED ஆவடி, திருநின்றவூர் பகுதியில் கொரோனா தொற்றுக்கு 4 பேர் பலி