×

மூவரசம்பட்டு ஏரியை பாதுகாக்க ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய கலெக்டருக்கு உத்தரவு

சென்னை:  சென்னை நங்கநல்லூர் மூவரசம்பட்டு ஏரியை பாதுகாக்க கோரி தொடரப்பட்ட  வழக்கில் காஞ்சிபுரம் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நங்கநல்லூரை சேர்ந்த ஏ.கே.இளையராஜா,  சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:  காஞ்சிபுரம் மாவட்டத்தின் நீராதாரமாக விளங்கிய ஏரிகளில் மூவரசம்பட்டு ஏரியும் ஒன்றாகும். சுமார் 2.33 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரி மடிப்பாக்கம்,  நங்கநல்லூர், பழவந்தாங்கல், புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக இருந்தது.   ஆனால், தற்போது ஏரி முற்றிலும் தூர்ந்துபோய் ஏரியே காணாமல் போகும் நிலையில் உள்ளது. பழைய பல்லாவரம்,  திரிசூலம், அம்மன் நகர், ஜெயலட்சுமி நகர் மற்றும் ஏரியை சுற்றியுள்ள பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மூவரசம்பட்டு ஏரியில் விடப்படுகிறது.

ஏரியின் கரைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. மேலும் ஏரியில் சட்ட விரோதமாக மண் அள்ளப்படுகிறது. இதனால, ஏரி முற்றிலும் பாதிக்கப்படும் நிலையில் உள்ளது. எனவே, மூவரசம்பட்டு ஏரியை பாதுகாக்கவும், அதை பழைய  நிலைக்கு மாற்றி, பராமரிக்க நடவடிக்கை எடுக்க கோரி காஞ்சிபுரம் கலெக்டர், பல்லாவரம் தாசில்தார் உள்ளிட்டோருக்கு கடந்த செப்டம்பர் 12ம் தேதி மனு அனுப்பினேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  எனவே, எனது  மனுவை பரிசீலித்து மூவரசம்பட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்குமாறும், சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை தடுக்குமாறும், ஏரியை பாதுகாக்குமாறும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.  இந்த மனு  நீதிபதிகள் வைத்தியநாதன், சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் வரும் 21ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு காஞ்சிபுரம் கலெக்டருக்கு உத்தரவிட்டனர்.

Tags : Ikorod ,lake ,Moovarasampattu ,Collector ,
× RELATED கொரோனா பரவாமல் தடுக்க ஹோமியோபதி...