வீடு இல்லாதோர் தினத்தையொட்டி காப்பக ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கு பயிற்சி

சென்னை: உலக வீடு இல்லாதோர் தினத்தை முன்னிட்டு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படும் காப்பக ஒருங்கிணைப்பு அலுவலர்களுக்கான ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. நகர்புறத்தில் தெரு மற்றும் சாலையோரங்களில்  வசிக்கும் மக்கள் தங்குவதற்காக காப்பகங்களை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ் அனைத்து பெருநகரங்கள் மற்றும் நகர்புறங்களில் காப்பகங்கள்  அமைக்கப்பட்டுள்ளன.  தமிழகத்தில் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் ₹107 கோடி மதிப்பீட்டில் 242 காப்பகங்கள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில், 149 காப்பகங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.  93 காப்பகங்கள் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertising
Advertising

இதில் மாவட்ட மற்றும் வட்டார தலைமை மருத்துவமனைகள் உள்ள இடங்களில் உள் நோயாளிகளின் உதவியாளர்கள் தங்குவதற்கான 89 காப்பகங்களும் அடங்கும். சென்னை மாநகராட்சி சார்பில் 38 காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ம் தேதி உலக வீடு இல்லாதோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும். இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் உள்ள  வீடற்றவர்களுக்கான காப்பகங்களின் ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான பயிற்சி முகாம் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா அரங்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

சென்னை மாநகராட்சி கல்வித்துறை துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.  இந்த முகாமில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.  இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் வீடற்றவர்களுக்கான காப்பகங்களை பார்வையிட்டனர்.

Related Stories: