செயல் அலுவலர் பதவி 6 மாதமாக காலி சிட்லபாக்கம் பேரூராட்சியில் வளர்ச்சி பணி பாதிப்பு: பொதுமக்கள் குற்றச்சாட்டு

தாம்பரம்: சிட்லபாக்கம் பேரூராட்சியில் கடந்த 6 மாதமாக செயல் அலுவலர் பதவி காலியாக உள்ளதால், எந்த பணிகளும் நடைபெறவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். தாம்பரம் தொகுதிக்கு உட்பட்ட சிட்லபாக்கம்  பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சென்னை புறநகர் பகுதிகளில் வேகமாக வளர்ச்சி பெற்று வரும் பகுதியான சிட்லபாக்கம் பேரூராட்சி, சென்னை வெள்ளத்தின்  போது கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது இங்கு வெள்ள பாதிப்புகளை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிட்லபாக்கம் பேரூராட்சியில் செயல் அலுவலர் பதவி கடந்த ஏப்ரல் மாதத்தில்  இருந்து காலியாக உள்ளது.

பொறுப்பு செயல் அலுவலராக குன்றத்தூர் பேரூராட்சியின் செயல் அலுவலர் குணசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவர் குன்றத்தூரில் இருந்து சிட்லபாக்கம் பகுதிக்கு வருவதற்கு, நீண்ட தூரம் அலைய வேண்டும் என்பதால், முறையாக  அலுவலகத்திற்கு வருவதில்லை.  மேலும் பேரூராட்சியில் எந்தெந்த பணிகளுக்கு தகுந்த கவனிப்புகள் கிடைக்கிறதோ அந்த பணிகளுக்கு மட்டும் செயல் அலுவலர் சரியாக வந்து ஆவணங்களில் கையெழுத்திட்டு தேவையானதை  பெற்றுக்கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. மற்றபடி, மக்களின் அடிப்படை தேவை, கோரிக்கைகள், புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவும், வளர்ச்சி பணிகளை கவனிக்கவும் அவர் அலுவலகத்திற்கு வருவதில்லை என்ற புகார்  எழுந்துள்ளது. சிட்லபாக்கம் அருகில் உள்ள மாடம்பாக்கம், பீர்க்கன்காரணை, பெருங்களத்தூர் பேரூராட்சிகளில் செயல் அலுவலர்கள் உள்ளனர். அவ்வாறு அருகில் உள்ள பேரூராட்சிகளில் இருந்து பொறுப்பு செயல் அலுவலர்  நியமிக்கப்பட்டிருந்தால் கூட அலுவலகத்திற்கு தினமும் வந்து மக்கள் பிரச்சினை என்ன என்பது குறித்து நடவடிக்கைகள் எடுத்திருப்பார்கள்.

ஆனால் குன்றத்தூர் செயல் அலுவலரை நீண்ட தூரத்தில் உள்ள சிட்லபாக்கம் பேரூராட்சிக்கு பொறுப்பு செயல் அலுவலராக நியமித்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது, மக்கள் தங்கள் பிரச்னைகளுக்காக பேரூராட்சி அலுவலகம்  சென்றால் அங்குள்ள ஊழியர்கள், எதுவாக இருந்தாலும் செயல் அலுவலர் வந்த பின்பு அவரிடம் உங்கள் புகார்களை தெரிவியுங்கள் என அலட்சியமாக சொல்லி அனுப்பி விடுகின்றனர். இதனால் பொதுமக்கள் தங்கள் புகார்கள் மற்றும்  குறைகளை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக புறநகர் பகுதிகளில் பரவி வந்து கொண்டிருக்கும் நிலையில் செயல் அலுவலர் இல்லாததால்  சிட்லபாக்கம் பேரூராட்சி பகுதியில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. பேரூராட்சி பகுதியில் நடைபெறும் வெள்ள தடுப்பு பணிகளையும் செயல் அலுவலர் இல்லாததால் ஊழியர்கள் முறையாக கவனிப்பதில்லை.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘புறநகரில் மிக முக்கியமான பேரூராட்சிகளில் சிட்லபாக்கம் பேரூராட்சியும் ஒன்று. ஆனால் இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பேரூராட்சியில் மக்கள் பிரச்னைகளை கவனிக்க 6 மாதமாக  செயல் அலுவலர் இல்லை. இதனால் எங்களுடைய பிரச்னைகளுக்கு அலுவலகத்திற்கு சென்று கேட்டால் செயல் அலுவலர் இல்லை, அவர் வந்தால் சொல்கிறோம், இல்லையென்றால் அவர் எப்போது அலுவலகத்திற்கு வருகிறாரோ அப்போது  வந்து அவரை நேரில் சந்தித்து உங்கள் பிரச்னைகள் குறித்து தெரிவியுங்கள் எனக்கூறி பேரூராட்சி ஊழியர்கள் எங்களை அனுப்பி வைத்து விடுகின்றனர்.

ஆனால், குன்றத்தூர் பேரூராட்சியில் இருந்து இங்கு பொறுப்பு செயல் அலுவலராக வந்து செல்லும் குணசேகரன் சிட்லபாக்கம் பேரூராட்சி கட்டிட அனுமதி கொடுப்பது போன்ற பணிகளுக்காக மட்டும் வந்து, அவருக்கு தேவையானதை  பெற்றுக்கொண்டு பொதுமக்களை சந்திக்காமல் சென்று விடுகிறார். இதனால் சிட்லபாக்கம் பேரூராட்சியில் மற்ற எந்த பணிகளும் நடைபெறுவதில்லை. எனவே, 6 மாதமாக காலியாக உள்ள செயல் அலுவலர் பதவிக்கு உரிய அதிகாரியை  உடனடியாக நியமித்து இப்பகுதி பொதுமக்களின் குறைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories: