வெறி நாய்க்கடி நோய் இல்லா இலக்கினை அடைய தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் திட்டம் : அனைத்து மண்டலங்களிலும் நடத்த முடிவு

சென்னை: வெறிநாய்க்கடி நோய் இல்லா மாநகரம் என்ற இலக்கினை அடைய வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் திட்டம், அக, புற ஒட்டுண்ணி நீக்கும் திட்டம் மண்டலம் வாரியாக தொடர்ந்து செயல்படுத்தப்படும், என மாநகராட்சி  தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: வெறிநாய்க்கடி நோய் இல்லா மாநகரம் என்ற இலக்கினை சென்னை மாநகராட்சி அடைய தீர்மானிக்கப்பட்டு, ஆணையர் உத்தரவின்படி பொது சுகாதாரத்துறை,  கால்நடை மருத்துவ பிரிவின் கீழ், மாபெரும் அளவிலான வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி போடும் திட்டம் மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் திட்டம் மண்டல வாரியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டது. அனைத்து மண்டலங்களிலும் மண்டல  அலுவலர், மண்டல நல அலுவலர் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் ஆகியோரின் மேற்பார்வையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertising
Advertising

மாதவரம் மண்டலத்தில் இத்திட்டம்  ஜூலை 16ம் தேதி தொடங்கப்பட்டு 8 நாட்களில் 8,846 நாய்களுக்கும், ஆலந்தூர் மண்டலத்தில் ஜூலை 30ம் தேதி செயல்படுத்தப்பட்டு 4 நாட்களில் 3,474 நாய்களுக்கும், அம்பத்தூர் மண்டலத்தில் ஆகஸ்ட்  13ம் தேதி துவங்கப்பட்டு 9 நாட்களில் 8,243 நாய்களுக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் ஆகஸ்ட் 28ம் தேதி செயல்படுத்தப்பட்டு 6 நாட்களில் 4,461 நாய்களுக்கும், வளசரவாக்கம் மண்டலத்தில் செப்டம்பர் 9ம் தேதி துவங்கப்பட்டு 6 நாட்களில்  5,869 நாய்கள் என மொத்தம் 30,893 நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக, அண்ணாநகர் மண்டலத்தில் கடந்த 1ம் தேதி துவங்கப்பட்டு 4 நாட்களில் 3,346  தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடிநோய் தடுப்பூசிகள் மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்க மருந்து போடப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 34,239 நாய்களுக்கு இத்திட்டத்தின் மூலம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

இத்திட்டம் செயல்படுத்தும்போது, பொதுமக்கள் தாமாக முன்வந்து தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளுக்கும் தடுப்பூசியினை போட்டுள்ளனர். மண்டலம் 3, 12, 7, 15, 11 மற்றும் 8ல் மொத்தம் 2,154 செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி  போடப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்துகையில், பொதுமக்களிடம் வெறிநாய்க்கடி நோய் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, இதன் மூலம் வெறிநாய்க்கடி நோயிலிருந்தும், அக, புற ஒட்டுண்ணி  தாக்குதலிலிருந்தும் தெருநாய்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் இச்சிறப்புத்திட்டம் தொடர்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: