ஆந்திராவில் இருந்து காரில் கடத்திய 5 லட்சம் செம்மரக்கட்டைகள் பறிமுதல்: தப்பியோடிய 2 பேருக்கு வலை

சென்னை: கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி மையம் உள்ளது. இதன் வழியாக நாள்தோறும்  ஆந்திரா, டெல்லி, பீகார், அரியானா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டில் சென்னை,  கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் ஏராளமான சரக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வாகனங்களில் செம்மரக் கட்டைகள் கடத்தப்படுவதாக நேற்று முன்தினம்  திருவள்ளூர் - காஞ்சிபுரம் போதைபொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபாகரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து எஸ்ஐ செல்வம் மற்றும் 6 பேர் கொண்ட குழு எளாவூர் சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் நள்ளிரவு  தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலை  ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த ஒரு காரை போலீசார் மடக்க முயன்றனர். ஆனால், அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதைத் தொடர்ந்து  எளாவூர் பஜார் வரை போலீசார் ஜீப்பில் விரட்டி சென்று அந்த  காரை மடக்கினர். உடனே காரை நிறுத்திவிட்டு டிரைவர் உட்பட 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். அந்த காரை போலீசார் சோதனை செய்தபோது, அதன் டிக்கியில் மிகப் பழமையான, அரைடன் எடையிலான 11 செம்மரக் கட்டைகள் கடத்தி வரப்பட்டது  தெரியவந்தது. இதன் மதிப்பு ₹5 லட்சம் எனக் கூறப்படுகிறது. பின்னர் செம்மரக்கட்டைகளுடன் காரை பறிமுதல் செய்து, மாதர்பாக்கம் வனத்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும், தப்பியோடிய 2 பேரை போலீசார் வலைவீசி  தேடிவருகின்றனர்.

Related Stories: