லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ஆவடி நகர நில அளவை பிரிவில் ₹90 ஆயிரம், ஆவணம் சிக்கியது

ஆவடி: ஆவடி புதிய ராணுவ சாலையில் உள்ள பழைய நகராட்சி அலுவலகத்தில் ஆவடி நகர நில அளவை பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் தனி  வட்டாட்சியராக ஸ்ரீதரன்  பணியாற்றி வருகிறார்.

இங்கு ஆவடி, பட்டாபிராம், கோவில்பதாகை, திருமுல்லைவாயல், அண்ணனூர், மிட்டனமல்லி, முத்தாபுதுப்பேட்டை ஆகிய இடங்களைச் சேர்ந்த மக்கள் பட்டா, பட்டா பெயர் மாற்றம் ஆகியவை பெற விண்ணப்பித்து வருகின்றனர். அவர்களது  விண்ணப்பத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து பட்டா, பட்டா பெயர் மாற்றம் தொடர்பாக சான்று வழங்கி வருகின்றனர். சமீபகாலமாக இங்கு  விண்ணப்பிக்கும் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்குவதில்லை எனவும்,  25 ஆயிரம் முதல் 35  ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுகொண்டு பட்டா வழங்கப்படுகிறது என்றும் புகார்கள் எழுந்தன. அதுமட்டுமின்றி, இங்கு விண்ணப்பிக்கும் பொதுமக்கள் லஞ்சம் வழங்காவிட்டால் பல மாதங்கள் இழுத்தடித்து விட்டு, ஏதேனும் காரணம் கூறி பட்டா  வழங்க அதிகாரிகள் மறுப்பதாகவும் கூறப்படுகிறது.  
Advertising
Advertising

மேலும், இங்கு 10க்கும் மேற்பட்ட புரோக்கர்கள் இருந்துகொண்டு பொதுமக்களிடம்  விண்ணப்பங்களை பெற்று அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கி கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்தன.  மேய்க்கால், புறம்போக்கு, குளம், குட்டை, நீர்நிலை  புறம்போக்கு, ஏரி உள்வாயில், கோயில், அனாதீனம் ஆகிய நிலங்களுக்கு போலி பட்டா வழங்கப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு பொதுமக்கள் சார்பில் தொடர்ந்து புகார்கள் சென்றன.  இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு 8 மணி  அளவில் ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி குமரகுரு தலைமையில் போலீசார் ஆவடி நில அளவை பிரிவு அலுவலகத்திற்கு திடீரென்று வந்தனர். இதனை பார்த்து, அங்கு இருந்த சில புரோக்கர்கள் ஓட்டம் பிடித்தனர். மேலும், ஒரு  சிலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

அதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார், அலுவலக கதவை பூட்டிக்கொண்டு சோதனை நடத்தினர். அங்கு தனி வட்டாட்சியர் தரன் மற்றும் 3 பெண் ஒப்பந்த ஊழியர்களும் இருந்தனர். அவர்களிடம் ஆவணங்களை வாங்கி கிடுக்கிப்பிடி  விசாரணை நடத்தினர். இதில் கணக்கில் வராத 90 ஆயிரம் மற்றும்  பல லட்சம் மதிப்புள்ள ஆவணங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். அங்குள்ள அதிகாரிகள், ஊழியர்கள் பட்டா வழங்கிவிட்டு அதனை பதிவேடுகளில் பதிவு செய்யாமல்  இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், அங்கு பணியில் இருந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை யார் வழங்குகிறார்கள், எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது எனவும் விசாரணை நடத்தினர். இந்த சோதனையானது நள்ளிரவு 1 மணி அளவில் வரை நடைபெற்றது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறுகையில், ‘ஆவடி நகர நில அளவைப் பிரிவில் பல முறைகேடுகள் நடப்பதாக பொதுமக்கள் சார்பில் அடிக்கடி புகார்கள் வந்தன. இதனை அடுத்து இங்கு சோதனை நடத்தி உள்ளோம். இந்த சோதனையில்  ரொக்கப்பணம் மற்றும் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முறையான கணக்கு விபரங்களை அதிகாரிகள் காண்பித்தால் பணம் மற்றும் ஆவணம் திருப்பி அளிக்கப்படும். இல்லாவிட்டால் தீவிர விசாரணைக்கு பிறகு   அதிகாரிகள், ஊழியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: