×

சுடுகாட்டுப்பாதை கேட்டவருக்கு வீட்டுமனை பட்டா முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் முகாமின் அவலம் இது

குஜிலியம்பாறை, அக். 10: குஜிலியம்பாறை அருகே நடந்த முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், கடுகாட்டுப் பாதை கேட்டு மனு கொடுத்தவருக்கு, வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்ற பதிலால் மனுதாரர் அதிர்ச்சியடைந்துள்ளார்.குஜிலியம்பாறை தாலுகா, சின்னுலுப்பை ஊராட்சி சி.அம்மாபட்டியில் இந்திரா காலனி உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட குடியிருப்புகள் உள்ளன. சி.அம்மாபட்டி சின்னக்குளத்தில் உள்ள சுடுகாட்டு மயானத்தை இக்காலனி குடியிருப்பு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். காலனி குடியிருப்பு அருகே ரயில்வே தண்டவாளம் உள்ளது. இதை கடந்துதான் சுடுகாட்டு மயானத்திற்கு செல்ல வேண்டும். ரயில்வே துறைக்கு சொந்தமான இடத்தை கடந்து செல்ல இக்காலனி மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் சுடுகாட்டிற்கு செல்வதற்கு முறையான பாதை வசதி இல்லை.

இதை கருத்தில் கொண்டு இக்காலனி மக்களுக்கு சுடுகாட்டு பாதை கேட்டு, கடந்த 29.8.19 அன்று சி.அம்மாபட்டியில் வருவாய்த்துறை சார்பில் நடந்த முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், சி.அம்மாபட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுரேஷ்குமார்(45) என்பவர் மனு கொடுத்தார். இதையடுத்து 6.10.19 அன்று அவரது செல்போன் எண்ணிற்கு மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து குறுஞ்செய்தி வந்தது. இதைத்தொடர்ந்து அவர் ஆன்லைன்னில் மனு குறித்த நடவடிக்கை என்ன என்பதை தெரிந்து கொண்டுள்ளார். அதில் கோரிக்கை மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலில் மனுதாரருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.'

மனுதாரர் சுடுகாட்டுப்பாதை கேட்டு மனு கொடுத்த நிலையில், அவருக்கு வீட்டுமனைப்பட்டா குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பதிலால் அதிர்ச்சியடைந்தார். முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் முகாமில், மக்கள் கொடுக்கும் மனுக்கள் எது சம்பந்தப்பட்ட கோரிக்கை மனு என்று கூட பார்க்காமல், கண் மூடித்தனமாக பதில் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை இல்லாமல் பெயளரவிற்கு மட்டுமே முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Tags : home ,Chief Minister ,grievance camp ,
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு