×

தொடர் மழையால் பன்னீர் கரும்பு விளைச்சல் அமோகம்

சேலம், அக்.10: சேலம் அடுத்த தாசநாயக்கன்பட்டியில் பன்னீர்கரும்பு அமோகமாக விளைந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு அறுவடை செய்யப்படும் என்று கரும்பு விவசாயிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பன்னீர்கரும்பு, வெள்ளை கரும்பு உள்ளிட்டவைகள் ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதில் குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விவசாயிகள் பன்னீர்கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர் உள்பட பல பகுதிகளில் விவசாயிகள் கடந்த பிப்ரவரி, மார்சில் பன்னீர் கரும்பு சாகுபடி செய்து இருந்தனர். தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பன்னீர்கரும்பு நல்ல விளைச்சலை தந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இது குறித்து தாசநாயக்கன்பட்டியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை மையமாக கொண்டு பன்னீர்கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பன்னீர்கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவைகள் 70 சதவீதம் வளர்ச்சியை தந்துள்ளன. இன்னும் 30 சதவீதம் தான் இருக்கிறது. தொடர் மழை காரணமாக விவசாயிகள் எதிர்பார்த்த அளவில் நல்ல விளைச்சலை தந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு அறுவடை செய்து விற்பனை அனுப்பப்படும், என்றனர்.

Tags : rainfall ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில்...