×

கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து குறைந்தது

கிருஷ்ணகிரி, அக்.10: கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீரின் அளவு 2047 கன அடியாக குறைந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட நீர்பிடிப்பு பகுதி மற்றும் கர்நாடகா மாநிலம் பெங்களூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் தென்பெண்ணை ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்நிலையில், நேற்று காலை 8 மணி நிலவரப்படி கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் தற்போது 41.82 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணைக்கு 1120 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1120 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீருடன், தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் வரும் தண்ணீரும் சேர்த்து கிருஷ்ணகிரி அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 2047 கன அடியாக உள்ளது. நேற்று முன்தினம் 2247 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நேற்று 2047 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. இதனால் 200 கன அடி தண்ணீர் குறைந்துவிட்டது.

நேற்று மாலை நிலவரபடி அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 42.50 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 2047 கன அடி தண்ணீர் ஆற்று மதகுகள் வழியாக திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர்ந்து 2வது நாளாக தென்பெண்ணை ஆறு பாயும் கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்ட தென்பெண்ணை ஆற்று கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். நேற்று காலை 8 மணி நிலவரபடி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதிவாகியுள்ள மழை அளவு விவரம் வருமாறு: அதிகபட்சமாக தளியில் 15 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. தேன்கனிக்கோட்டை  6.20 மி.மீ., ஓசூர்  5 மி.மீ., போச்சம்பள்ளி  4.20 மி.மீ என மொத்தம் 30.40 மி.மீ மழை பதிவாயிருந்தது.

Tags : Krishnagiri Dam ,
× RELATED சாத்தனூர் அணை நீர்மட்டம் 117.85 அடியாக...