×

மகசூல் அதிகரிக்க விதை பரிசோதனை செய்வது அவசியம்

தர்மபுரி, அக்.10: தர்மபுரி விதை பரிசோதனை அலுவலர் ரவி வெளியிட்டுள்ள அறிக்கை: வேளாண்மையில் உயர் விளைச்சலுக்கு தரமான விதை, அடிப்படையான, முதுகெலும்பு போன்றதாகும். தரமான விதைகளே, பயிரின் உற்பத்திறன், உயரிய மகசூல் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றை நிர்ணயிக்கிறது. விதையின் தரத்தினை நிர்ணயிப்பதில், விதையின் முளைப்புத்திறனானது முதன்மைப் பங்கு வகிக்கிறது. முளைப்புத் திறனை முன்கூட்டியே அறிவதால், விதையின் அளவை முளைப்புத் திறனுக்கு ஏற்றவாறு நிர்ணயிக்கலாம். விவசாயிகள் தரமான விதைகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்ற நோக்கில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், அங்கீகரிக்கப்பட்ட விதை பரிசோதனை ஆய்வகங்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் விவசாயிகள் காலம் மற்றும் பணம் விரயமில்லாமல், உரிய காலத்தில் தங்களிடமுள்ள விதைகளை பகுப்பாய்வு செய்து கொள்ளலாம். விதை பரிசோதனை நிலையம், தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தின் பின்புறத்தில் இயங்கி வருகிறது.

விதைகளின் முளைப்புத்திறன் அறிய விரும்பும் விவசாயிகள் தங்களிடமுள்ள விதைகளை, நெல் மற்றும் கீரை விதைகளாக இருப்பின் 50 கிராமும், மக்காச் சோளம் மற்றும் மணிலா விதைகளாக இருப்பின் 500 கிராமும், சோளம், உளுந்து, பாசிப்பயறு, சூரியகாந்தி, வெண்டை விதைகளாக இருப்பின் 100 கிராம் அளவும், கத்தரி, மிளகாய், தக்காளி போன்ற காய்கறி விதைகளானால், 10 கிராம் அளவும் எடுத்து துணிப்பையில் இட்டு, பயிர், ரகம், குவியல் எண் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்பக் கடிதத்துடன், இணைத்து மேற்கண்ட முகவரியில் நேரில் கொண்டு வந்து கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளலாம். ஒவ்வொரு விதை மாதிரிக்கும், விதைப் பரிசோதனை கட்டணமாக 30 வசூலிக்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Seed testing ,
× RELATED விவசாயிகள், விதை விற்பனையாளர்கள் விதை பரிசோதனை செய்து கொள்ள அழைப்பு