×

திருச்சி மத்திய சிறையில் ஒடிசா டிஜிபி ஆய்வு

திருச்சி, அக்.10: திருச்சி மத்திய சிறையில் ஒடிசா மாநில சிறைத்துறை டிஜிபி சத்யஜித்மொகந்தி ஆய்வு நடத்தினார். தமிழகத்தில் மொத்தம் 9 மத்திய சிறை சாலைகள் உள்ளது. இதில் திருச்சி மத்திய சிறையில் 13 பிளாக்குகள், 150 டார்மெண்டரி பிளாக்குகள், 180 தனி செல் உள்ளது. இவற்றில் திருச்சி மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளான திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், கரூர் மற்றும் பிற பகுதிகளில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் கைதிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, பாக்குமட்டையில் தட்டு தயாரித்தல், வாழைநாரில் கயிறு திரித்தல், தையல், பிளம்பர், மெழுகுவர்த்தி தயாரித்தல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிறையில் தயாரிக்கப்படும் மெழுகுவர்த்திகள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. வெல்டிங் பயிற்சி பெற்ற கைதிகள் கிரில் கேட் மற்றும் ஜன்னல்கள் செய்து வருகின்றனர். மண்புழு உரம் தயாரிப்பு, 12 ஏக்கரில் கீரை வகைகள், காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளது.

கூடுதலாக 60 தென்னை மரங்களும், 50க்கும் மேற்பட்ட வாழை மரங்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக மத்திய சிறையில் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் உதவியுடன் பைல் அட்டைகள், புக் பைண்டிங் மற்றும் பில் புத்தகம் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு சுயதொழில்கள் கற்றுத்தரப்பட்டு ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து திருச்சி மத்திய சிறைக்கு ஓடிசா மாநில சிறைத்துறை டிஜிபி சத்யஜித்மொகந்தி நேற்று மாலை சென்றார். அங்கு கைதிகளால் உருவாக்கப்படும் பல்வேறு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சுமார் 1 மணி நேரம் பார்வையிட்டு ஆய்வு செய்த டிஜிபி, இதுபோல் ஒடிசா சிறைசாலையிலும் விரிவுப்படுத்தப்பட உள்ளதாக கூறி சென்றார். இந்த ஆய்வின்போது சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Odisha DGP ,Trichy Central Prison ,
× RELATED திருச்சி அகதிகள் சிறப்பு முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் தற்கொலை முயற்சி