×

கொசு ஒழிப்பு பணியில் அடாவடி சுகாதார பணியாளர்களை முற்றுகை

திருப்பூர்,அக்.10:திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகர் பகுதியில், கொசு உருவாகும் விதத்தில் தண்ணீர் சேமித்து வைத்துள்ளதாக கூறி, தண்ணீரை தரையில் கொட்டிய சுகாதார பணியாளர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சி 50வது வார்டுக்குட்பட்ட தென்னம்பாளையம் காலனி முத்துசாமி லே-அவுட் பட்டுக் கோட்டையார் நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக நேற்று காலை மாநகராட்சி சுகாதார பணியாளர்கள் சென்றனர். அப்போது அந்த பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை மேற்கொண்ட சுகாதார பணியாளர்கள் கொசு உருவாகும் வகையில் தண்ணீர் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக கூறி, சேமித்து வைக்கப்பட்ட தண்ணீரை தரையில் கொட்டியதாக தெரிகிறது. பின்னர், அந்த பகுதியில், ஆள் இல்லாமல் இருந்த குடியிருப்புகளுக்கு சென்ற பணியாளர்கள், மூதாட்டி ஒருவரின் வீட்டின் குடிநீர் இணைப்பை துண்டிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், குடிநீர் இணைப்பை துண்டிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சுகாதார பணியாளர்களின் செயலை கண்டித்தும், அவர்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து, சுகாதார ஆய்வாளர் சின்னதுரை மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள பாதிக்கும் மேற்பட்டோர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். வீட்டில் வசிப்பவர்கள் இல்லாத நேரத்தில் அங்கு சென்று வீட்டின் வாசலில் உள்ள பொருட்களை ஆய்வு செய்வதோடு, குடிநீர் இணைப்புகளை துண்டிக்க முயற்சி செய்கிறார்கள். இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.

Tags :
× RELATED டெங்கு கொசு ஒழிப்பு பணி டவுனில் பழைய டயர்கள் அகற்றம்