×

கழிவு நீர் தேக்கத்தால் தொற்று நோய் பரவும் அபாயம்


திருப்பூர், அக்.10: திருப்பூர் ஊத்தக்குளி ரோடு கோல்டன் நகர் பகுதிகளில் சாக்கடை கழிவு நீர் மாதக்கணக்கில் தேங்கி நிற்பதால் கடும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட ஊத்துக்குளி ரோடு கோல்டன் நகர் பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொது மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் பின்னலாடை நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களாக உள்ளனர். இப்பகுதியில் முறையான சாக்கடை கால்வாய் வசதிகள் இல்லாததால் பல்வேறு இடங்களில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் அடைப்புகளை அகற்றி  சாக்கடை கழிவு நீர் தேக்கமின்றி சென்றது. கடந்த சில மாதங்களாக சாக்கடை கால்வாயில் விழுந்துள்ள கழிவுகளை அகற்றாததால் பல்வேறு இடங்களில் சாக்கடை கழிவு நீர் தேங்கிநிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு சகிக்க முடியாத துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து மாநகராட்சி சுகாதார பிரிவு அலுவலரிடம் பல முறை பொது மக்கள் முறையிட்டும் இது வரை அகற்றப்படவில்லை. சாக்கடை கழிவுகளை அகற்ற வில்லையெனில் இப்பகுதியில் பல்வேறு தொற்று நோய், விஷக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளது. விரைவில் சாக்கடை அடைப்புகளை அகற்ற வேண்டுமென மாநகராட்சி கமிஷனருக்கு இப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED குளிர்காலம் தொடங்கியுள்ளதால் நோய் தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம்