9 வட்டங்களில் 12ம் தேதி பொது விநியோக குறைதீர் கூட்டம்

தஞ்சை, அக். 10: தஞ்சை மாவட்டத்தில் 9 வட்டங்களில் பொது விநியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 12ம் தேதி நடக்கிறது.

பொது விநியோக திட்டத்தில் ஏதேனும் குறைபாடு இருப்பின் அதை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கும் ஒவ்வொரு மாதமும் 9 வட்டங்களில் உள்ள பொது விநியோக திட்டம் தொடர்பான மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் நடப்பு அக்டோபர் மாதத்துக்கான கூட்டம் வரும் 12ம் தேதி 9 வட்டங்களில் நடத்தப்படுகிறது.
Advertising
Advertising

தஞ்சை வட்டத்தில் நரசநாயகபுரம், திருவையாறு வட்டத்தில் காருகுடி, ஒரத்தநாடு வட்டத்தில் சங்கரன்தெரு, கும்பகோணம் வட்டத்தில் நீலத்தநல்லூர், பாபநாசம் வட்டத்தில் மணல்மேடு, திருவிடைமருதூர் வட்டத்தில் உமாமகேஸ்வரபுரம், பட்டுக்கோட்டை வட்டத்தில் மன்னங்காடு, பேராவூரணி வட்டத்தில் நாடியம், பூதலூர் வட்டத்தில் கோவிலடி ஆகிய கிராமங்களில் உள்ள நியாயவிலை அங்காடிகளில் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட அங்காடிகளில் முகாமிட்டிருக்கும் வட்ட வழங்கல் அலுவலரிடம் பொதுமக்கள் மனுக்களை அளித்து குறைகளுக்கு தீர்வு காணலாம். இவ்வாறு தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Related Stories: