×

வனப்பகுதி காட்டேஜ்கள் மூடல் ஊட்டிக்கு வராமல் கர்நாடகா, கேரளா சென்ற வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

ஊட்டி, அக். 10: யானைகள் செல்லும் பாதையில் இயங்கி வந்த காட்டேஜ் மற்றும் ரிசார்ட்டுகள் மூடப்பட்டதால், ஊட்டிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது.  அவர்கள் கர்நாடகம், கேரளா மற்றும் கோவா போன்ற வேறு மாநிலங்களுக்கு தங்களது பயணத்தை மாற்றி விட்டனர். நீலகிரியில் வனங்கள் மற்றும் வன விலங்குகள் அதிகம் காணப்படும் முதுமலை, தெப்பக்காடு, மசினகுடி போன்ற பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் மற்றும் ரிசார்ட்டுக்களில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்குவதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் மசினகுடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ரிசார்ட்டுக்களில் தங்குவது வழக்கம். பல நாட்கள் இங்கு தங்கி ஓய்வு எடுத்து செல்வது வழக்கம்.

இவர்கள், கட்டணத்தை பற்றி கண்டுகொள்ளாமல் குழுக்களாக வந்து பல நாட்கள் தங்கும் நிலையில், ரிசார்ட் மற்றும் காட்டேஜ்களுக்கு அதிகள லாபம் கிடைத்து வந்தது. இந்நிலையில், மசினகுடி பகுதியில் இருந்த பெரும்பாலான காட்டேஜ்கள் மற்றும் ரிசார்ட்டுகள் யானை செல்லும் பாதைகளில் கட்டப்பட்டுள்ளதாக கூறி கடந்த ஆண்டு முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி, ெபாக்காபுரம், வாழைத்தோட்டம், மாவநல்லா மற்றும் சிங்காரா போன்ற பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட ரிசார்ட்டுகள் மற்றும் காட்டேஜ்கள் மூடப்பட்டன. இதனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது சுற்றுலா திட்டத்தை மாற்றியுள்ளனர். இதில் ஒரு சில சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வந்த போதிலும், பெரும்பாலானவர்கள் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் மற்றும் கேரள மாநிலம் வயநாடு போன்ற பகுதிகளுக்கு செல்வதாக கூறப்படுகிறது. இதனால், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்துள்ளதாக சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் வழிகாட்டிகள் கூறுகின்றனர். வெளிநாடு சுற்றுலா பயணிகள் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு இரண்டாம் சீசனின்போது கிடைத்து வந்த வருவாய் கிடைக்காமல் போய்விட்டது.

 இது குறித்து சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் வழி காட்டிகள் கூறியதாவது: ஆண்டு தோறும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிகளவு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருவார்கள். குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகம் வருவார்கள். இவர்கள், பெரும்பாலும் இயற்கை சார்ந்த பகுதிகள் மற்றும் தனிமையில் உள்ள காட்டேஜ், ரிசார்ட்டுக்களில் தங்குவதை விரும்புவார்கள். முதுமலை சுற்றிலும் உள்ள பெரும்பாலான காட்ேடஜ்கள் மற்றும் ரிசார்ட்டுக்கள் கடந்த ஆண்டு மூடப்பட்டன. இதனால், நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கர்நாடகம், கேரளா மற்றும் கோவா போன்ற வேறு மாநிலங்களுக்கு இந்த ஆண்டு தங்களது பயணத்தை மாற்றி விட்டனர், என்று கூறினர்.

Tags : Kerala ,Karnataka ,forest cottages ,
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...