தஞ்சை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு விகிதம் 2.1 சதவீதம் மருத்துவக்கல்லூரி முதல்வர் தகவல்

தஞ்சை, அக். 10: தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு விகிதம் என்பது 2.1% ஆகும். 1.5 ஆண்டுக்கு 353 குழந்தைகள் மட்டுமே இறந்துள்ளதாக தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் தெரிவித்தார். தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் 18 மாதங்களில் 995 குழந்தைகள் உயிரிழந்ததாக தகவல் அறியும் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட தகவல் இணைய தளங்களில் பரவி வருகிறது. இதற்கு பதிலளிக்கும் வகையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:

தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் ஆண்டுக்கு 1,72,693 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். இதில் மகப்பேறு சிகிச்சைக்கு வரும்போதே 322 குழந்தைகள் இறந்து வருகிறது. மேலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடியாமல் இறுதி நேரத்தில் வந்து இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 120 ஆகும். காப்பாற்றவே முடியாமல் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 200 ஆகும். மொத்தம் இதில் மட்டும் 642 குழந்தைகள் இறந்துள்ளன. எனவே ஆண்டுக்கு 1,72,693 பேர் சிகிச்சை பெறும் நிலையில் தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு விகிதம் என்பது 2.1 சதவீதமாகும். 1.5 வருடத்திற்கு 353 குழந்தைகள் மட்டுமே இறந்துள்ளது. இவ்வாறு குமுதா லிங்கராஜ் தெரிவித்தார்.

Related Stories: