×

அரசு அறிவித்துள்ள நெல் கொள்முதல் விலையால் விவசாயிகள் அதிருப்தி

ஈரோடு, அக். 10:இடுபொருள் செலவு, ஆட்கள் கூலி உள்ளிட்டவை பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள நடப்பாண்டிற்கான நெல் கொள்முதல் விலை ஏமாற்றமளிப்பதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவில் பெய்துள்ளதால் பெரும்பாலான அணைகள் நிரம்பி உள்ளதையடுத்து பாசனங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் நெல் நடவு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நேரத்தில் கீழ்பவானி, காலிங்கராயன், தடப்பள்ளி அரக்கன்கோட்டை, மேட்டூர் மேற்கு கரை வாய்க்கால் உள்ளிட்ட பாசனங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் நெல் நடவு பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழக அரசு நடப்பாண்டுக்கான நெல் கொள்முதல் விலையை அறிவித்துள்ளது. அதன்படி, கிரேடு-1 எனப்படும் சன்ன ரகம் குவிண்டால் ரூ.1905க்கும், மோட்டா ரகம் ரூ.1865க்கும் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சன்ன ரகம் குவிண்டால் ரூ.1840க்கும், மோட்டா ரகம் ரூ.1800க்கும் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் இந்தாண்டு சன்ன ரகத்திற்கு கூடுதலாக ரூ.65ம், மோட்டா ரகத்திற்கு ரூ.65ம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கொள்முதல் விலை உயர்வானது இன்றைய இடுபொருள் செலவு, கூலி உயர்வோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுப்பு கூறியதாவது: தமிழக அரசு நெல் கொள்முதல் விலை அறிவிப்பு விவசாயிகளுக்கு கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. ஆனால், கடந்தாண்டு ரூ.400க்கு விற்கப்பட்ட உரம் தற்போது ரூ.1200க்கு விற்பனையாகிறது. கடந்தாண்டு ஒரு ஏக்கர் நடவு கூலி ரூ.3 ஆயிரம் இருந்தது.  இந்த ஆண்டு ரூ.6 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. உற்பத்தி செலவுக்கும், அரசு அறிவித்துள்ள கொள்முதல் விலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல் உள்ளது. உற்பத்தி செலவுடன், குறிப்பிட்ட சதவீத லாபத்தை கணக்கிட்டு கொள்முதல் விலை அறிவித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மத்திய அரசு அறிவித்துள்ள நெல் ஆதார விலையோடு மாநில அரசு தன்னுடைய பங்கிற்கு ஊக்கத்தொகையாக சன்ன ரகத்திற்கு ரூ.70ம், மோட்டா ரகத்திற்கு ரூ.50ம் அறிவித்துள்ளது. மத்திய, மாநில அரசுகள், விவசாயிகளின் நலன் மீது கவனம் செலுத்தாமல் சொற்ப விலையை அறிவித்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. இன்றைய உற்பத்தி செலவினை கணக்கிட்டால் சன்ன ரகத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.2500ம், மோட்டா ரகத்திற்கு ரூ.2300ம் அறிவித்தால் மட்டுமே கட்டுபடியாகும். எனவே, தமிழக அரசு ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சுப்பு கூறினார்.

Tags : government ,
× RELATED நெல்லை, தென்காசி மாவட்டங்களில்...