×

மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வழிமுறை வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

அரியலூர், அக்.10: செந்துறை பகுதியில் பயிரிடப்பட்ட மக்காச்சோளத்தில் ராணுவ படைப்புழுக்கள் தென்படுவதால், அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து செந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) ஜென்சி ஆலோசனை கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மக்காச்சோள பயிரில் ராணுவ படைப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகள்: செந்துறை வட்டாரத்தை சார்ந்த வஞ்சினபுரம், நக்கம்பாடி, நமங்குணம், ஆனந்தவாடி, மணப்பத்தூர், குழுமுர் ஆகிய கிராமங்களில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு பயிர் வளர்ச்சி நிலையில் உள்ளது. தற்பொழுது மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் காணப்படுகிறது.

படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த மக்காச்சோள விதைப்பு செய்யும்போது வரப்பு பயிராக ஆமணக்கு, தட்டைப்பயறு, எள், துவரை ஆகிய பயிர் செய்து நன்மை செய்யும் பூச்சிகளை அதிகரித்து படைப்புழுவை கட்டுபடுத்திடலாம். விதைப்பு செய்த 1 வாரத்திற்குள் அசாடிராக்டின் 0.03ஈசி மருந்து ஏக்கருக்கு 1லிட்டரை 200லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். மக்காச்சோள படைப்புழு தாக்குதல் தெரியும் பட்சத்தில் எமாமெக்டின் ஏக்கருக்கு 100கிராம் 200லிட்டர் நீரில் கலந்து தெளித்திடவும் மற்றும் மெட்டாரைசியம் அனிசோபிலே உயிரியல் மருந்து ஏக்கருக்கு 400கிராம் 200லி நீரில் தெளித்து கட்டுப்படுத்த கேட்டுகொள்ளப்படுகிறது. மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 5 எண் இனகவர்ச்சி பொறி வயலில் வைத்து ஆண்பூச்சியின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செந்துறை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) ஜென்சி தெரிவித்துள்ளார்.

Tags : Agriculture Officer ,mosquito attack ,
× RELATED விவசாயிகள், விதை விற்பனையாளர்கள் விதை பரிசோதனை செய்து கொள்ள அழைப்பு