×

அமிர்தா பல்கலை மாணவர்கள் என்ஜின் எக்ஸ் 2019 போட்டியில் வெற்றி

கோவை,அக்.10:சிறந்த பொறியாளர்களைக் கண்டறியவும், நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதுமையான தயாரிப்புகளை வெளிக்கொண்டு வரவும் டி.சி.எஸ் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் என்ஜின்எக்ஸ் போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 17414 அணிகள் பங்கேற்றன. இதில் கோவை அமிர்தா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூன்றாமாண்டு கணினி பொறியியல் துறை மாணவர்கள் தனா விஷ்ணு, தனுஷ், சித்தார்த் மற்றும் கிரண் எஸ் ராஜ் ஆகியோர் பங்கேற்றனர். பார்க்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் நடுக்கத்தை குறைக்கும் வகையில் இவர்கள் கண்டுபிடித்த கையுறை முதல் பரிசை வென்றது. மைக்ரோ கன்ட்ரோலர், சென்சார் மற்றும் காயின் மோட்டார் போன்றவற்றை இணைத்து தயாரிக்கப்பட்ட இந்த கையுறை போட்டி நடுவர்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. இது குறித்து தனா விஷ்ணு கூறுகையில், உலகம் முழுவதும் 10 மில்லியன் மக்கள் பார்க்கின்ஸன் நோயால் அவதிப்படுகின்றனர். நோயால் அவதிப்படுபவர்களுக்கு உதவும் வகையில் இந்த கையுறைகளை தயாரித்துள்ளோம் என்றார். இது குறித்து கண்டுபிடிப்பு ஆலோசகர் டாக்டர் ஸ்ரீராம் கே வெங்கட்ராமன் கூறுகையில், பார்க்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், புதிய தீர்வை காண விரும்பி மாணவர்கள் இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டனர். முறையான பதிவுக்கு பின், மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

Tags : Amrita University ,competition ,
× RELATED மாணவர்களுக்கான இணையதள பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டது சிபிஎஸ்இ