×

நூற்பாலை, ஆயத்த ஆடை பெண் தொழிலாளர் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்

கோவை, அக். 10: நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை பெண் தொழிலாளர்களின் பிரச்னைக்கு தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் வழிகாட்டு கொள்கை மூலம் தீர்வு காணப்படும் என கோவையில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி டாக்டர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.  தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை பெண் தொழிலாளர்களுக்கான பணியிட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு மற்றும் பணி ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை பணியாளர்களுக்கான தமிழ்நாடு மகளிர் ஆணையத்தின் வழிகாட்டு கொள்கையை கொண்டுவர உள்ளது. இதற்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில், வரைவு கொள்கையை வெளியிட்டு, நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை பணியாளர்கள்,  உரிமையாளர்கள் மற்றும் உரிமையாளர்களின் கூட்டமைப்புகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவையை சேர்ந்த நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை பெண் தொழிலாளர்கள், உரிமையாளர்களுக்கான கருத்து கேட்பு கூட்டம் காந்திபுரம் கோவை தமிழ்நாடு ஓட்டலில் நேற்று நடந்தது.
 
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவி டாக்டர் கண்ணகி பாக்கியநாதன் ஐஏஎஸ்(ஓய்வு) பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் சுமார் 7,500 நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றும் 85 சதவீதம் பேர் பெண்கள். இப்பணியில் பெண்களுக்கு சம்பள பிரச்னை, பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளது. இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் வரைவு கொள்கை வெளியிடப்பட உள்ளது. இது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெண்களுக்கு உரிய பணி பாதுகாப்பு அளிக்க முடியும். இதன் காரணமாக தொழிலில் பிரச்னை ஏற்படாது. ஆட்கள் பற்றாக்குறை நீங்கும். கம்பெனிகளுக்கு லாபம் ஏற்படும். நாங்கள் கம்பெனி நிர்வாகத்தில் தலையிட மாட்டோம். குறைபாடுகளை கேட்டறிந்து தீர்வுக்கான வழியை செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதில், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குனர் ஜெகதீசன், வக்கீல் செல்வி, குழந்தைகள் நேய செயல்பாட்டாளர் தேவநேயன், ரீடு நிறுவன இயக்குனர் கருப்பசாமி, கோவையை சேர்ந்த 15 நூற்பாலை மற்றும் ஆயத்த ஆடை நிறுவன பெண் ஊழியர்கள், உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். அவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கருத்து கேட்பு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ₹14.20 லட்சம் கடத்திய கில்லாடி