பாதுகாப்பற்ற மழைநீர் சேகரிப்பு தொட்டி

ஈரோடு, அக். 10: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 2வது மண்டலம் 20வது வார்டுக்குட்பட்ட பள்ளிவாசல் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மழை நீர் சேகரிப்பு தொட்டி கட்டப்பட்டுள்ளது. சுமார் 5 அடி ஆழம் கொண்ட இந்த தொட்டியில் சமீபத்தில் பெய்த மழை நீர் நிரம்பி கிடக்கிறது. தொட்டியின் மேற்புறம் மூடப்படாமல் அப்படியே விட்டுவிட்டதால் தண்ணீரில் தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தரப்பில் கூறியதாவது: மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடந்து வருகின்றது. இதையடுத்து, மழை நீரை சேகரிக்கும் வகையில் சுமார் 5 அடி உயரம் கொண்ட தொட்டி கட்டப்பட்டது. சமீபத்தில் பெய்த மழையினால் மழைநீர் சேகரிப்பு தொட்டி நிரம்பி உள்ளது.

Advertising
Advertising

மழை நீர், பூமிக்குள் இறங்காமல் அப்படியே தண்ணீர் தேங்கி நிற்பதோடு தொட்டியை மூடாமல் அப்படியே விட்டுள்ளதால் தண்ணீரில் குழந்தைகள் தவறி விழ வாய்ப்பு உள்ளது. மேலும், கடந்த 20 நாட்களுக்கு முன்பு பணி முடிக்கப்பட்ட நிலையில் இன்னும் தொட்டியின் மேற்பகுதி மூடப்படாமல் அதிகாரிகள் அலட்சியமாக விட்டுவிட்டனர். இது குறித்து மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  தேங்கி கிடக்கும் மழை நீரில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் என்பதால் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாநகராட்சி நிர்வாகம் மழை நீர் சேகரிப்பு தொட்டியை மூடாமல் உள்ளதால் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: