ஈரோடு ரயில் நிலையத்தில் 5 ஆண்டாகியும் முழுமை பெறாத எஸ்கலேட்டர் அமைக்கும் பணி

ஈரோடு, அக்.10: ஈரோடு ரயில் நிலையத்தில் நடந்து வரும் எஸ்கலேட்டர் அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள்  வலியுறுத்தி உள்ளனர். சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள ஈரோடு ரயில் நிலையத்தில் 4 பிளாட்பாரம் உள்ளது. இந்த ரயில் நிலையங்களில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஜவுளி, மஞ்சள், எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் சரக்கு ரயில்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேலும், வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த ரயில் நிலையத்தை தினமும் பயன்படுத்தி வருகின்றனர். 4 பிளாட்பாரம் உள்ள நிலையில் இங்கு லிப்ட் வசதியோ, எஸ்கலேட்டர் வசதியோ இல்லாமல் இருந்தது. ரயில்வே பார்சல் சர்வீஸ் அலுவலகம் ரயில் நிலையத்தின் முன்பு செயல்பட்டு வந்தபோது சரக்குகளை கொண்டு செல்வதற்காக லிப்ட் வசதி இருந்தது. இந்த பார்சல் அலுவலகம் பின்புற பகுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் லிப்ட் வசதிகள் இல்லாத நிலை இருந்து வந்தது.

Advertising
Advertising

ஈரோடு ரயில் நிலையத்தில் லிப்ட் வசதிகள், எஸ்கலேட்டர் வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, 4 பிளாட்பாரங்களுக்கு செல்லும் வகையில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் அமைக்க கடந்த 2014ம் ஆண்டு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் துவங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையில் அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளது.  1 மற்றும் 2வது பிளாட்பாரத்தில் லிப்ட் பணிகளும், 3 மற்றும் 4வது பிளாட்பாரத்தில் எஸ்கலேட்டர் அமைக்கும் பணியும் முடிந்துள்ளது. ஆனால், 1 மற்றும் 2வது பிளாட்பாரத்திற்கு செல்வதற்காக எஸ்கலேட்டர் அமைக்கும் பணிகள் இன்னும் நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து காங்கிஸ் சிறுபான்மை பிரிவு நிர்வாகியும், முன்னாள் தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினருமான பாட்சா கூறுகையில், `ஈரோடு ரயில் நிலையத்தில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வசதி ஏற்படுத்த கடந்த 2014ம் ஆண்டு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது. ஆனால், இன்னும் பணிகளை முழுமையாக முடிக்காமல் உள்ளனர். தற்போது எஸ்கலேட்டர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பயணிகளுக்கான அனைத்து வசதிகளையும் ரயில்வே நிர்வாகம் செய்துதர வேண்டும்’ என்றார்.

Related Stories: