×

போக்குவரத்துக்கும், மக்களுக்கும் இடையூறு தாந்தோணிமலை டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கரூர், அக். 10: பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருந்து வரும் தாந்தோணிமலை டாஸ்மாக்கை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. பிரதான திண்டுக்கல் செல்லும் சாலையோரம் இந்த கடை அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.மேலும் கலெக்டர் அலுவலகம் முதல் அனைத்து அலுவலகங்களும் இந்த பகுதியில் தான் உள்ளன. எனவே, அனைத்து அதிகாரிகளும் இந்த சாலையின் வழியாகத்தான் வாகனங்களில் அலுவலகத்துக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், சாலையோரம் உள்ள இந்த டாஸ்மாக் கடைக்கு வரும் சிலர், சாலையோரம் நின்று குடித்து விட்டு, சாலையோரத்திலேயே போதையில் மயங்கி கிடப்பது, அவ்வப்போது சாலையின் மையத்தில் நின்று கொண்டு வாகனங்களை தடுத்து நிறுத்துவது, தகாத வார்த்தைகளை கூறுவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், டாஸ்மாக் கடையின் அருகிலேயே அரசுடைமையாக்கப்பட்ட வங்கியும் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களும் குடிமகன்களின் தொந்தரவால் அவதியுற்று வருகின்றனர்.

எனவே, இந்த டாஸ்மாக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.மதியம் முதல் இரவு வரை இதே போன்ற சூழ்நிலையில்தான் டாஸ்மாக் கடை வளாகப்பகுதிகள் உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பகுதியில் நிலவும் பிரச்னைகளை பார்வையிட்டு, தேவையான மாற்று ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tandonimalai Task Shop ,
× RELATED வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்