தூத்துக்குடியில் புத்தகத்திருவிழா கண்காட்சி 4 நாட்களில் 10 ஆயிரம் பேர் பார்வையிட்டனர்

தூத்துக்குடி, அக். 10: தூத்துக்குடியில் நடந்து வரும் புத்தகத்திருவிழாவில் நான்கு நாட்களில் 10 ஆயிரம் பேர் பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கிசென்றனர். தூத்துக்குடி புதிய பஸ்நிலைய மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், நேஷனல் புக் டிரஸ்ட் புதுடில்லி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தக திருவிழா மற்றும் கண்காட்சி கடந்த 5ம் தேதி துவங்கியது. வரும் 13ம்தேதி வரை இந்த புத்தகத்திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி அமைக்கப்பட்டுள்ள புத்தக கண்காட்சியில் பல்வேறு புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இதனிடையே தமிழக அரசு ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அறிவித்து செயல்படுத்திய பல்வேறு திட்டங்களின் புகைப்படங்களும், தமிழக அரசின் சாதனைகள் உள்ளிட்ட புகைப்படங்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருக்கின்றன. அரசின் திட்டங்களை பெறுவது குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 4 நாட்களில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட நபர்கள் புகைப்படக்கண்காட்சியினை பார்வையிட்டுள்ளனர். காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் புத்தக திருவிழாவில் அனைத்து புத்தகங்களும் 10 சதவீதம் தள்ளுபடியில் விற்பனை செய்யப்படுகின்றன. பொது மக்களின் பொழுது போக்கிற்காக மாலை 3 மணி முதல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. மேலும், உணவு அரங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளன.  
Advertising
Advertising

 

6வது நாளான இன்று (10ம் தேதி) மாலை 3 மணி முதல் 5 மணிவரை எட்டயபுரம், எம்.பி.எம். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களும், தூத்துக்குடி புனித சிலுவை மனையியல் கல்லூரி மாணவிகளும் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். தொடர்ந்து, கரிசல்குயில் கிருஷ்ணசாமியின் கரிசல் பாடல்களும், கலைமணி ராஜூ குழுவினரின் தோல்பாவைக்கூத்து, மாலை 6 மணியளவில் ஆதிச்சநல்லூர் - தாமிரபரணி நாகரிகம் என்ற தலைப்பில் சீனிவாசன், தமிழர்களின் பெருமிதம் என்ற தலைப்பில் நாறும்பூநாதன், நம் வாழ்க்கை நம் கையில் என்ற தலைப்பில் சுகி சிவம் சிறப்புரைரையாற்றுகின்றனர்.

Related Stories: