இஸ்ரோ சார்பில் நட்சத்திரத்தின் நுழைவு வாயில் திட்ட ஆராய்ச்சி

தூத்துக்குடி, அக். 10: இஸ்ரோ வளர்ச்சி திட்டத்தின் ஒரு கட்டமாக நட்சத்திரத்தின் நுழைவுவாயில் என்ற தலைப்பில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.  விண்ணில்  நிலவை தவிர நான்கு இடங்கள் மனிதன் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளதால் அந்த 4 இடங்களுக்கு செல்ல  நிலவில் இருந்து எரிபொருள் நிரப்பிச் செல்லும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும் என நெல்லை இஸ்ரோ உந்தும நிலைய வளாக இயக்குநர் மூக்கையா தெரிவித்தார். உலக விண்வெளி வாரத்தையொட்டி தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரியில் இந்திய விண்வெளி மையத்தின் மகேந்திரகிரி உந்தும வளாக மையம் சார்பில் விண்வெளி கண்காட்சி துவங்கியது. இதில் பல்வேறு விண்வெளி ஆய்விற்கு பயன்படுத்தப்படும் ராக்கெட் பாகங்கள், செயற்கை ேகாள் மாதிரிகள், படங்கள் இடம்பெற்றிருந்தன, பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

ராக்கெட்டுகள் செலுத்த பயன்படுத்தப்படும் கிரையோஜினிக் இயந்திரங்களின் மாதிரிகளும் வைக்கப்பட்டிருந்தன. நேற்று  துவங்கிய இக்கண்காட்சி  தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும்.  கண்காட்சியை கலெக்டர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார். விழாவுக்குத் தலைமை வகித்த மகேந்திரகிரி இஸ்ரோ உந்தும நிலைய வளாக இயக்குநர் மூக்கையா பேசுகையில், ‘‘அக்டோபர் 10ம் தேதி வரை கொண்டாடப்படும் விண்வெளி வார விழாவையொட்டி இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.

நட்சத்திரத்தின் நுழைவுவாயில் என்ற தலைப்பில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள பட உள்ளன.  இந்த ஆராய்ச்சியின்படி  விண்ணில்  நிலவை தவிர நான்கு இடங்கள் மனிதன் வாழக்கூடிய சூழ்நிலை உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள்  அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதற்கேற்றபடி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள விண்வெளித்துறை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த 4 இடங்களுக்கு செல்வதற்கு  நிலவில் இருந்து எரிபொருள் நிரப்பிச் செல்லும் வகையில் திட்டங்கள் வடிவமைக்கப்பட வேண்டும். மாணவ மாணவிகள் வரும் காலங்களில் உலக அளவில் பல நாடுகளின் செயற்கைகோள்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மண்ணெண்ணெய்யில் இயங்கும் இயந்திரங்கள் வடிவமைப்பு குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக  இந்திய விண்வெளி மையம் சார்பில் பிரதமர் அறிவித்துள்ள ககன்யான் திட்டத்தின்படி 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்  மனிதனை விண்ணுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன’’ என்றார். விழாவில் இந்திய விண்வெளி மையத்தின் முன்னாள் தலைவர் வாசகம், இஸ்ரோ எரிபொருள் மையத்தின் இணை இயக்குநர் அழகுவேலு, வஉசி கல்லூரி செயலாளர்  சொக்கலிங்கம், கல்லூரி முதல்வர் வீரபாகு பங்கேற்றனர்.

Related Stories: