×

ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகே நோய் பரப்பும் நம்ம டாய்லெட்

=தண்ணீர் இல்லை =உடைந்த உபகரணங்கள்

ஆவடி, அக்.10: ஆவடி மாநகராட்சி அலுவலகத்தை ஒட்டியுள்ள கழிப்பறை பராமரிப்பு இன்றி  உடைந்து கிடக்கிறது. இதனால், சுகாதார சீர்கேட்டால் மக்கள் நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். ஆவடி, புதிய ராணுவ சாலை பகுதியில் ஆவடி மாநகராட்சி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு மனை மற்றும் கட்டிட உரிமை சான்றிதழ், வரி செலுத்துதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஆதார் அட்டை விண்ணப்பிக்கவும், திருத்தம் செய்யவும், இ-சேவை மையத்தில் பல்வேறு வகை சான்றிதழ் பெற பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு தினமும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதோடு மட்டுமில்லாமல், பொதுமக்கள் தங்களுடைய பகுதிகளுக்கு சாலை, தெருவிளக்கு, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை தீர்ப்பதற்காக அதிகாரிகளை சந்திக்க வந்து செல்கின்றனர். இவ்வாறு வந்து செல்லும் மக்கள், இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக மாநகராட்சி அலுவலகத்தை ஒட்டி கழிப்பிடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கழிப்பிடம் கடந்த 3ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.20 லட்சம் செலவில் ‘’நம்ம டாய்லெட்’’ என்ற பெயரில் கட்டப்பட்டது. இந்த கழிப்பறை மக்களை கவரும் வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டது எவர்சில்வர் பொருட்கள், சோலார் விளக்கில் கூடிய பச்சை நிறத்தில் கட்டப்பட்டது. தற்போது, கழிப்பறையை முறையாக பராமரிக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் கைவிட்டனர்.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆவடி மாநகராட்சி அலுவலகத்தை ஒட்டி அமைக்கப்பட்ட கழிப்பறையில் கதவுகள் உள்ளிட்ட உபகரணங்கள் உடைந்து கிடக்கின்றன. மேலும், கழிப்பறையில் தண்ணீர் வசதியும் இல்லை. இதனால், மாநகராட்சிக்கு வரும் பொதுமக்கள் சிலர் கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் வெளியிலேயே சிறுநீர் கழிக்கின்றனர்.  இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், சுகாதார சீர்கேட்டால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதோடு மட்டுமல்லாமல், பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க  முடியாமல் அவதிப்பட்டு  செல்லுகின்றனர். மேலும், கழிப்பறையை சுற்றி சரக்கு வாகனங்களை நிறுத்தி ஆக்கிரமித்து விடுகின்றனர்.
இதனை சாதகமாக பயன்படுத்தி சமூக விரோதிகள் இரவு மற்றும் பகல் நேரங்களில் அப்பகுதியில் மது அருந்துவது, கஞ்சா புகைப்பது உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதே போல், மாநகராட்சி பகுதியில் பல இடங்களில் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ‘’நம்ம டாய்லெட்’’ என்ற கழிப்பறை பராமரிப்பின்றி பாழாகிறது.

ஒவ்வொரு கழிப்பிடத்தையும் பராமரிக்க ஒரு நபரை நியமித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள், இதனை காதில் வாங்காமல் அலட்சியமாகவே உள்ளனர். மேலும், பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டம் மூலம் பல்வேறு இடங்களில் கூடுதலாக கழிப்பிடம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டுவருகிறது. ஏற்கனவே கட்டிய ‘’நம்ம டாய்லெட்’’ முறையாக பராமரிப்பின்றி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதனால், மக்கள் வரிப்பணம் லட்சக்கணக்கில் வீணாகி வருகிறது. இதற்கிடையில் பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால், பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டால் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, ஆவடி மாநகராட்சி அலுவலகத்தை ஒட்டிய கழிப்பறையில் உடைந்து கிடக்கும் கதவு உள்ளிட்ட உபகரணங்களை சீரமைக்கவும், தினமும் பராமரிக்க ஒரு ஊழியரை நியமிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : office ,Awadhi Corporation ,
× RELATED ஆவடி மாநகராட்சியில் 4 பேர் பலி