×

திருவள்ளூர் மும்மாரி திட்டத்தில் தூர்வாரிய காக்களூர் தாமரைக்குளத்தில் கழிவு நீர் கலப்பு

திருவள்ளூர், அக்.  10: ‘திருவள்ளூர் மும்மாரி’ திட்டத்தின் கீழ் காக்களூர் தாமரைக்குளம் அரைகுறையாக தூர்வாரப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில், அதில் கழிவுநீர் கலப்பதால் பாசி படர்ந்து துர்நாற்றம் வீசுகிறது.திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்கள் நடைப்பயிற்சி செய்வதற்கோ, பொழுது போக்கவோ ஒரு பூங்கா கூட இல்லை. காக்களூர் பஸ் நிறுத்தம், காரணீஸ்வரர் கோயில் அருகே, பல ஆயிரம் சதுரடி பரப்பளவில் தாமரை குளம் உள்ளது.இந்த தாமரை குளக்கரையின் இருபுறமும், கரை பலப்படுத்தப்பட்டு, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ரூ.80 லட்சம் மதிப்பில் நடைபாதை அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் தாமரை குளத்தை தனியார் நிறுவனம் ஒன்றுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் தூர்வாரும் பணியை துவக்கியது. மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பணியை துவக்கி வைத்தார்.

இந்நிலையில், குளம் தூர்வாரும் பணிகள் அரைகுறையாக நடத்தப்பட்டு தற்போது அலங்கோலமாக உள்ளது.  இக்குளத்தில், அருகில் உள்ள ஓட்டல் கழிவுநீர் கலந்துவருகிறது. இதனால், தாமரைக்குளம் பாசிபடர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. இக்குள கரையில் உள்ள காரணீஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், மூக்கை பொத்தியபடி சாமி தரிசனம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.எனவே, இப்பிரச்னையில் கலெக்டர் தலையிட்டு, தாமரைக்குளத்திற்கு செல்லும் கழிவுநீரை தடுத்து, மழைரை முழுவதுமாகவும், அதிகளவிலும் சேகரிக்கும் வகையில் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thavarakkulam ,Thiruvallur ,
× RELATED சிவகங்கை நகராட்சியில் தேங்கும் கழிவு...