×

செங்குன்றம் தனியார் குடோனில் பதுக்கிய ₹5 கோடி செம்மரக்கட்டை பறிமுதல்

புழல், அக். 10: செங்குன்றம் அருகே தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
செங்குன்றம் அருகே உள்ள வடபெரும்பாக்கம், தனலட்சுமி நகர், ஜெயா நகர் விரிவாக்கம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான குடோனில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு மூத்த அதிகாரி கருணாகரனுக்கு நேற்று ரகசிய தகவல் வந்தது.அதன்படி கருணாகரன் தலைமையில் 10க்கு மேற்பட்ட புலனாய்வுத்துறை மற்றும் செங்குன்றம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 10 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு சுமார் ₹5 கோடி என கூறப்படுகிறது.இவற்றை போலீசார் பறிமுதல் செய்து பதுக்கி வைத்தது யார்? குடோன் உரிமையாளர் யார்? என பல்வேறு கோணங்களில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், “தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் செம்மரக்கட்டைகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நகர்ப்பகுதிகளில் உள்ள தனியார் குடோன்களில் குறிப்பாக வடபெரும்பாக்கம், தனலட்சுமி நகர், ஜெயா நகர் விரிவாக்கம், பாயசம்பாக்கம், செங்குன்றம், பாடியநல்லூர், நல்லூர், ஆட்டந்தாங்கல், அலமாதி, எடப்பாளையம், பாலாஜி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தனியார் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தோம். ஆனால் கண்டும்காணாமல் உள்ளனர்.

எனவே பல இடங்களில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை நடத்தினால் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்கள், செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்ய வாய்ப்பு இருக்கும். மேலும் இந்த பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதையும் ஆய்வு செய்தால் எளிதில் பிடிபடும். எனவே இதில் உயரதிகாரிகள் துணிச்சலுடன் செயல்பட்டு நடவடிக்கை எடுத்தால் அனைத்தையும் பறிமுதல் செய்ய முடியும்” என்றனர்.

Tags : Red Cross ,
× RELATED லால்குடி அருகே மூட்டை மூட்டையாக...